/indian-express-tamil/media/media_files/2025/06/09/GP0nG1dag3ZvFEA1GLL9.jpg)
Causes and Symptoms of Fatty Liver: கொழுப்பு கல்லீரலுக்கான காரணங்கள் என்ன?
Causes and Symptoms of Fatty Liver: நாம் உண்ணும் உணவைச் செரிப்பது முதல் உடலின் நச்சுக்களை நீக்குவது பல்வேறு வேலைகளைச் செய்யும் கல்லீரலின், ஆரோக்கியத்தை நாம் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். இதன் விளைவாக, கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver) முதல் கல்லீரல் செயலிழப்பு வரை பல கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எத்னிக் ஹெல்த்கேர் மருத்துவர் டாக்டர் யோகா வித்யா வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், கல்லீரலை பாதிக்கும் காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் பாதுகாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
காரணங்கள்:
பாதிப்பு தீவிரமாகும் வரை அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. கல்லீரல் பாதிப்பிற்குப் பல காரணங்கள் உண்டு என்கிறார் டாக்டர் யோக வித்யா. இன்றைய அவசர உலகில், போதுமான உறக்கமின்மை, கொழுப்பு நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஆகியவை கல்லீரலில் கொழுப்பு படிய முக்கியக் காரணிகளாகின்றன. ஹெபடைடிஸ் போன்ற வைரஸ் தொற்றுகள் கல்லீரலை நேரடியாகத் தாக்கி, அதன் செயல்பாடுகளை முடக்குகின்றன. சில நேரங்களில், நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம். உடலின் நோயெதிர்ப்பு மண்டலமே கல்லீரல் செல்களைத் தாக்கும் நிலையும் பாதிப்பை உண்டாக்கலாம்.
அறிகுறிகள்:
கல்லீரல் பாதிப்படையத் தொடங்கும்போது, உடல் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கும். குறிப்பாக, அடிவயிற்றின் வலது பக்கத்தில் ஏற்படும் வலி முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆரம்பத்தில் கொழுப்பு படிந்து 'கொழுப்பு கல்லீரல்' நோயாக உருவாகி, அது கவனிக்கப்படாமல் விட்டால், நாளடைவில் 'சிரோசிஸ்' (Cirrhosis) எனப்படும் கல்லீரல் சுருக்க நோயாகவும், இறுதியில் கல்லீரல் புற்றுநோயாகவும் மாறக்கூடிய அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறார் டாக்டர் யோக வித்யா.
எளிய வீட்டு வைத்தியங்கள்:
கரிசலாங்கண்ணி: "கல்லீரலின் காவலன்" என்றழைக்கப்படும் கரிசலாங்கண்ணி (Karisaalai), கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் சாற்றை எடுத்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நீரின் மகத்துவம்: தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலின் சுமையைக் குறைக்க உதவுகிறது. இது மிக எளிய ஆனால் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வழியாகும்.
உணவே மருந்து: கொழுப்பு நிறைந்த உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது கல்லீரலைக் காப்பதற்கான முதல் படியாகும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரிவிகித உணவு மற்றும் மேலே குறிப்பிட்ட எளிய இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்து, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம். உங்கள் உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.