வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறலாம்: தமிழக அரசின் இந்தத் திட்டம் எத்தனை பேருக்கு தெரியும்?

அடுத்தகட்டமாக, அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை, 2 லட்சத்து 3,286 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர்.

esanjeevaniopd stay home opd service:  கடந்த  மே மாதம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் சேவையை வழங்கியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்;

“இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாகச் சந்திக்க இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் தமிழக  முதல்வரால் மே மாதம் 13-ம் நாள் இ-சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இச்சேவையைப் பயன்படுத்த esanjeevaniopd.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது esanjeevaniopd என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலிக் காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

மேலும், மருத்துவரின் மின்னணுப் பரிந்துரைச் சீட்டு தனியரின் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.  அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியார் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் இத்திட்டத்தில் பொதுமக்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெறலாம்.

வெளியில் செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் இதனைத் தடுப்பதற்கும் கொரோனா போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதாமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு உரிய பயிற்சிக்குப் பின்னர் 865 அரசு மருத்துவர்களை ஈடுபடுத்தி இச்சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச எண்ணிக்கையில் மருத்துவர்களை ஈடுபடுத்தியும், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இச்சேவையை வழங்கியதிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அடுத்தகட்டமாக, அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை, 2 லட்சத்து 3,286 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர்.

தமிழக முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இச்சவாலான சூழ்நிலையில் பொதுமக்களுக்குத் தரமான மற்றும் எளிதில் மருத்துவச் சேவை கிடைக்க இத்திட்டம் வழிவகுக்கிறது”.

இவ்வாறு, அமைச்சர் விஜயபாஸ்கர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Esanjeevaniopd stay home opd service health minister vijayabhaskar

Next Story
இங்கு தான் பெண் ஆணைத் தேடுகிறாள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express