தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். வாழ்வியல் தர்ம நிகழ்வுகள் அனைத்தையும் செய்வதற்கு உகந்த மாதமாக தை பார்க்கப்படுகிறது. இதனால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகை எது மேல் பிறக்கிறதோ, அதை பொறுத்து அந்த ஆண்டு அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. செவ்வாய்க்கிழமை முருக பெருமானின் ஆசீர்வாதம் பெற்றது. இந்த ஆண்டு புலியின் மீது பொங்கல் பண்டிகை வருவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதாவது புலியின் மேல் சங்கராந்தி பகவான் வருவதாக பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கராந்தி பகவான் ஆண், பெண் கலந்து ரூபத்தில் வருவதால் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும். போதிய அளவு இந்த ஆண்டு மழை பெய்யும் எனவும் நம்பப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பொருளுக்கு விலையை தீர்மானம் செய்யக் கூடிய வகையில் இந்த ஆண்டு அமையும் என ஆன்மிகவாதிகள் பொங்கல் பலன் கூறுகின்றனர்.
இந்த தைப்பொங்கல் அனைத்து மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கான தொடக்கமாக இருக்கும். பூமி சார்ந்த தொழில் மற்றும் பணியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும். இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டுள்ள பொங்கலை கொண்டாடுவதற்கு ஒரு முறை உள்ளது.
அதனடிப்படையில் பொங்கல் பானையை வைப்பதற்கு நேரமும் இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையானது பௌர்ணமி யோகத்தில் வருகிறது. காலை 11:30 மணிவரை புனர்பூசம் நட்சத்திரம் உள்ளது. 11:30 மணிக்கு மேல் சனிபகவானின் ஆதிக்கம் வருகிறது. எனவே, பொங்கல் பானையை வைப்பதற்கான சரியான நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஆகும்.
இந்த நேரத்தை தவறவிட்டாலும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் பொங்கல் பானையை வைத்து வழிபாடு செய்யலாம். ஏனெனில், 11 மணிக்கு மேல் நட்சத்திரம் மாறிவிடுகிறது. எனினும், சரியாக 12 மணிக்கு பொங்கல் பானை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து சூரிய வழிபாடு செய்யலாம்.