மக்கானா எனப்படும் தாமரை விதைகள், சமீபகாலமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிற்றுண்டியாக மாறியுள்ளது. குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், இது 'சூப்பர்ஃபுட்' (superfood) என்றழைக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம்: சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் பாவியா முஞ்சல், மக்கானாவில் ஃபிளவனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளதாகவும், அவை அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), ஆக்ஸிஜனேற்ற (antioxidant) பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். இது கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தொடர்ந்து மக்கானா சாப்பிடுவது பெருந்தமனி தடிப்பு (atherosclerosis), உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
எடை குறைப்பு: இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், இது பசியை கட்டுப்படுத்தி, அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும். இதனால், வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, எடை குறைப்பிற்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது: மக்கானாவில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (glycemicindex) குறைவாக இருப்பதால், இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.நீரிழிவு நோயாளிகள் இதனை வறுத்த சிற்றுண்டியாக உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம். மேலும், குறைந்த அளவில் பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கும் இனிப்பு வகைகளாகவும் சாப்பிடலாம்.
ஃபர்டிஸ் மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா, மக்கானாவை வறுப்பதற்கு முன், அதைச் சிறு துண்டுகளாக நறுக்கி வறுக்குமாறு பரிந்துரைக்கிறார். இதனால், அதில் பூச்சி இருக்கிறதா? என்று சோதிக்கலாம். மேலும், இவ்வாறு செய்வது, சீராக வறுபடுவதற்கும், சுவைகளை நன்றாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது என்கிறார்.
யார் மக்கானாவைத் தவிர்க்க வேண்டும்?
மக்கானா ஆரோக்கியமானது என்றாலும், அதை அதிகமாகச் சாப்பிடுவது சிலருக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் சி.எம்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் எட்வினா ராஜ் எச்சரிக்கிறார்.
சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள்: மக்கானாவில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இந்த ஆக்சலேட்டுகள் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். சிறுநீரகக் கல் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளவர்கள் இதனை மிதமாகவே சாப்பிட வேண்டும். அதிக ஆக்சலேட்டுகள் உடலில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.
நீரிழிவு நோயாளிகள்: மக்கானா குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது என்றாலும், அதிகமாகச் சாப்பிடும்போது மற்ற கார்போஹைடிரேட்டுகளுடன் சேர்ந்து ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதைக் கட்டுக்குள் வைத்துச் சாப்பிடுவது அவசியம்.
ஒவ்வாமை உள்ளவர்கள்: நட்ஸ் மற்றும் விதைகளுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்கள் மக்கானாவைத் தவிர்க்க வேண்டும். இது அரிப்பு, தடிப்புகள் போன்ற லேசான ஒவ்வாமை அறிகுறிகள் முதல், அனாஃபைலாக்ஸிஸ் (anaphylaxis) போன்ற கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே, மக்கானாவை உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன், அவரவர் உடல்நிலைக்கு ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.