/indian-express-tamil/media/media_files/2024/10/30/heXERMmtrOfmjlTJn1Lt.jpg)
ஆண், பெண் என அனைத்து பாலினத்தவரும் தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். நாம் பார்க்கும் வேலை, நமது உணவு முறை, பழக்கவழக்கங்கள், தூங்கும் நேரம் என பல ஆரோக்கிய காரணிகளை உள்ளிடக்கியது முடி உதிர்வு பிரச்சனை.
ஆங்கிலத்தில் படிக்கவும்: From colour, aroma, to appearance: Here’s how to detect fake rosemary oil
முடி உதிர்வு பிரச்சனைகள் இளைஞர்களிடம் அதிகம் உள்ளதை அறிந்து, வணிக நோக்குடன் பல பொருள்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றில் சில பொருள்கள் முடி உதிர்வை தடுத்தாலும், பல பொருள்கள் கலப்படமானதாக உள்ளதால் பணம் வீணாவதுடன், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமீப காலமாக ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரோஸ்மேரி எண்ணெய் விற்பனையை கண்ட பலர் போலியான கலப்படம் நிறைந்த எண்ணெய்யை தயாரிக்கின்றனர். அதன்படி, கலப்படமான ரோஸ்மேரி எண்ணெய்யை கண்டறியும் முறையை, சருமம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவர் ஷரீஃபா நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
"ரோஸ்மேரி எண்ணெய்யின் சில துளிகளை தண்ணீரில் ஊற்ற வேண்டும். தண்ணீரின் மேல் ரோஸ்மேரி எண்ணெய் மிதந்தால், அது கலப்படமற்றது எனப் பொருள். அதுவே, நீரில் பட்டதும் அது கரைந்து விட்டால், நிச்சயம் வேறு சில இரசாயன பொருள்கள் கலந்தது என்று அர்த்தம்" என மருத்துவர் ஷரீஃபா தெரிவித்துள்ளார்.
மேலும், "ரோஸ்மேரி எண்ணெய்யின் நிறம் மற்றும் நிலைத்தன்மையை கூர்ந்து கவனிக்க வேண்டும். தரமான ரோஸ்மேரி எண்ணெய் மெலிதாககவும், திரவத்தன்மையுடனும் இருக்கும். ஆனால், எண்ணெய் கெட்டியாக இருந்தால் நிச்சயம் அது போலியானது. கருமை நிறமான ரோஸ்மேரி எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதை வாங்கலாம்" என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதேபோல், நீங்கள் வாங்கும் ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களின் பட்டியலில், கூடுதல் இரசாயனங்கள், வாசனைக்காக சேர்க்கப்பட்ட பொருள்கள் எனக் குறிப்பிட்டிருந்தால், அதனை தெளிவாக கவனிக்க வேண்டியது அவசியம் என மற்றொரு மருத்துவர் ஹரிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
"சுத்தமான ரோஸ்மேரி எண்ணெய் மரப்பட்டை மற்றும் மூலிகை நறுமணங்கள் நிறைந்தது. ஆனால், வாசனை நிறைந்த இரசாயனங்களின் நறுமணம் இருந்தால், அந்த எண்ணெய் கலப்படமானது. எனினும், போலியான ரோஸ்மேரி எண்ணெய்யில் அது போன்ற நறுமணத்தை புகுத்த முயற்சிகள் நடப்பதால், ஆராய்ந்து பார்க்க வேண்டும்" என மருத்துவர் ஹரிச்சந்திரன் கூறுகிறார்.
"சுத்தமான ரோஸ்மேரி எண்ணெய்யில் பிசுபிசுப்புத் தன்மை இருக்காது. அவ்வாறு இருந்தால் சருமத்தில் உறிந்து கொள்வதற்கு அதிக நேரம் ஆகும். எனவே, அது போன்ற ரோஸ்மேரி எண்ணெய்யை தவிர்க்க வேண்டும்" எனவும் மருத்துவர் ஹரிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுத்தமான ரோஸ்மேரி எண்ணெய்யை ஒளியில் இருந்து பாதுகாக்க, அவற்றை கருமையான கண்ணாடி பாட்டில்களில் அடைத்திருப்பார்கள். ஏனெனில், எண்ணெய்யின் தரத்தை ஒளி கெடுத்து விடும் என்பதால், இவ்வாறு செய்யப்படுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரோஸ்மேரி எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறப்படுகிறது.
ரோஸ்மேரி எண்ணெய் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை கொண்டவை. ஆனால், காலப்போக்கில் அவற்றின் தரத்தில் மாற்றம் ஏற்படலாம். இதனால் சருமத்தில் வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும். அதன்பேரில், எண்ணெய்யின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டுமென மருத்துவர் ஷரீஃபா கூறுகிறார்.
ரோஸ்மேரி எண்ணெய்யின் தரத்தை மற்றொரு பரிசோதனை மூலம் கண்டறியலாம். "ரோஸ்மேரி எண்ணெய்யை சிறிய துண்டு காகிதத்தில் விட வேண்டும். சுத்தமான ரோஸ்மேரி எண்ணெய் ஆவியாகும் தன்மை கொண்டது. அதன்படி, எண்ணெய் இருந்த தடம் இல்லாமல் முற்றிலும் ஆவியாகி இருந்தால் அது தரமான எண்ணெய். அதுவே, காகிதத்தில் எண்ணெய்க் கறை இருந்தால் அது கலப்படமானது" என மருத்துவர் ஹரிச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனால், நம்பகமான சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் ரோஸ்மேரி எண்ணெய்யை வாங்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.