/indian-express-tamil/media/media_files/2025/08/25/drinking-water-2-2025-08-25-10-15-09.jpg)
Photograph: (Image: Freepik)
நல்ல ஆரோக்கியத்திற்கு நாம் செய்யக்கூடிய எளிமையான விஷயம் தண்ணீர் குடிப்பதுதான். ஆனால், நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறை உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவசரமாகக் குடிப்பது முதல் சாப்பிடும்போது குடிப்பது வரை, நாம் அனைவரும் சில தவறுகளைச் செய்கிறோம். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ ஒரு ஆரோக்கிய பயிற்சியாளருடன் பேசியபோது, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரியான எடையைப் பராமரிக்கவும், அதிக ஆற்றலைப் பெறவும் தண்ணீர் குடிக்கும்போது இந்தத் தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
தண்ணீரை அவசரமாகக் குடித்தல்
தண்ணீரை அவசரமாகக் குடிக்கும்போது உடலுக்கு ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. தண்ணீரை விழுங்குவதற்கு முன்பு 2-3 வினாடிகள் வாயில் வைத்துச் சுழற்றுவது நல்லது.
மிக சூடான அல்லது மிகக் குளிர்ந்த தண்ணீரைக் குடித்தல்
சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரைக் குடிக்க வேண்டும். இல்லையெனில், அந்தத் தண்ணீரை உடல் முதலில் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வரவும், பின்னர் அதைச் செயல்படுத்தவும் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடித்தல்
சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடித்தால், உணவைச் செரிப்பது கடினமாகிவிடும். தண்ணீர் குடிக்க விரும்பினால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ குடிக்கலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து குடித்தல்
சூட்டில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், மைக்ரோபிளாஸ்டிக்குகளை வெளியிடுகின்றன. அவை தண்ணீரில் கலந்துவிடும்.
வேதாஸ் க்யூரின் ஆயுர்வேத நிபுணர் விகாஸ் சாவ்லா, மேற்கண்ட குறிப்புகளை விரிவாக விளக்கினார். மேலும் சில விஷயங்களையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
"வெதுவெதுப்பான தண்ணீர் உடலுக்கு அவசியம், அதேசமயம் மிகவும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, மிகவும் குளிர்ந்த நீர் செரிமான ஆற்றலைக் குறைத்து, செரிமான மண்டலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீர் சருமத்தைச் சுத்தப்படுத்துவதோடு, முகப்பருக்களையும் நீக்குகிறது. இது சருமத்தை மேம்படுத்தி, முகப்பரு பிரச்சனை உள்ள ஆண், பெண் இருவருக்கும் உதவுகிறது.
மேலும், தண்ணீரை நேராக உட்கார்ந்துதான் குடிக்க வேண்டும். சாய்ந்தபடியோ அல்லது படுத்தபடியோ குடிக்கக் கூடாது. “சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இது செரிமான மண்டலத்தைப் பாதித்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலம் உருவாகக் காரணமாகிறது” என்று அவர் கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/24/portrait-young-fitness-woman-earphones-2025-08-24-20-41-10.jpg)
நொய்டா சர்வதேச மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவமனை நிறுவனத்தின் பொது மருத்துவப் பேராசிரியர் டாக்டர் எஸ். ஏ. ரஹ்மான், பிளாஸ்டிக் பாட்டில்கள் வெப்பம் அல்லது சூரிய ஒளியில் படும்போது, பிஸ்பினால்-ஏ (BPA) மற்றும் தாலேட்டுகள் போன்ற இரசாயனங்கள் தண்ணீரில் கலப்பதாகத் தெரிவித்தார்.
"பிஸ்பினால்-ஏ (BPA) மற்றும் தாலேட்டுகள் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மை, இனப்பெருக்கச் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கு இடையூறுகளுடன் அறிவியல் பூர்வமாகத் தொடர்புடையவை. மைக்ரோபிளாஸ்டிக்கால் அசுத்தமான தண்ணீர், வீக்கம் மற்றும் செல்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தலாம்" என்று அவர் கூறினார்.
நீர்ச்சத்து பற்றிய கட்டுக்கதைகள்
நீர்ச்சத்து குறித்து பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. ஒரு பொதுவான கட்டுக்கதையை அவர் மறுத்தார்: “அனைவரும் தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது ஒரு தவறான கருத்து. ஒவ்வொரு உடலும் வித்தியாசமானது, ஒருவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு மற்றொருவருக்கு மாறுபடும். தாகம் எடுக்கும்போது நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும், ஏனெனில் உங்கள் உடலுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது அது இயற்கையாகவே சமிக்ஞை செய்யும்.”
உங்கள் உடலின் தாக உணர்வுதான் உங்கள் நீர்ச்சத்து தேவைகளைக் கண்டறிய நம்பகமான வழியாகும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உங்கள் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட முடியாமல் போகலாம். இதனால் சிறுநீர் மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் - இது நீங்கள் நீர்ச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதற்கான அறிகுறியாகும். உங்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்போது உங்கள் உடல் சமிக்ஞை செய்யும்.
உங்கள் தனிப்பட்ட நீர்ச்சத்து தேவைகளைப் புரிந்துகொண்டு, பல வகையான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் உடல் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யலாம். எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு பானத்தைக் குடிக்கச் செல்லும்போது, அது தாகத்தைத் தணிப்பது மட்டுமல்ல, உங்கள் முழு உடலுக்கும் எரிபொருள் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.