பசுமை பட்டாசுகள் இந்த தீபாவளிக்கு அதிகம் பேசப்படும் ஒன்று. அது என்ன பசுமை பட்டாசுகள்? எப்படி இருக்கும்? பச்சையாக இருக்குமா? இப்படியெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு இதோ ஒரு சின்ன விளக்கம்.
பசுமை பட்டாசு என்பது, குறைந்த புகை மற்றும் நச்சுதன்மை வெளிப்படுவதாகும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு பசுமை பட்டாசுகள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பட்டாசு வெடிப்பது, பட்டாசு தயாரிப்பது குறித்து வழங்கிய தீர்ப்புக்கு பிறகு இந்த பெயர் அதிகமாக புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளது.
பசுமை பட்டாசு:
அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள் சல்ஃபர், பொட்டாசியம் மற்றும் பேரியம் ஆகிய வேதி மருந்துகளை பட்டாசில் வைத்தால் காற்று மாசுவை தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த காற்று மாசுவை குறைக்கத்தான் பசுமை பட்டாசுகள் (GREEN CRACKERS) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார். பின்பு, 2018 ல் பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு பசுமைப் பட்டாசை தயாரித்திருப்பதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சாம்ராட் கோஷ் கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, பசுமை பட்டாசுகள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. சராசரி பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலியின் டெசிபல் அளவை விட குறைவான ஒலியே பசுமை பட்டாசுகள் உண்டாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கூறப்படும் பசுமை பட்டாசில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் சேர்க்கப்பட்டு உள்ளது. சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை. இந்த பட்டாசின் ஒலி அளவு 120–ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரி பட்டாசுகளின் விலையை விட பசுமை பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பசுமை பட்டாசுகள் என்றே ஒன்ற இதுவரை தயாரிக்கப்படவில்லை என்று அதிர்ச்சி தகவலை தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவது போல் பசுமை பட்டாசு என்று ஒன்று இல்லையென்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படி பொதுமக்கள் எதை வெடிப்பார்கள் என்று தெரியவில்லை. பட்டாசுக்கு பெயர் போன சிவகாசியில் இதுவரை தீபாவளிக்கு தேவையான அனைத்து பட்டாசு தயாரிப்பு வேலைகளும் முடிந்து விட்டன.
ஆனால் இதுவரை பசுமை பட்டாசுகள் எப்படி இருக்கும் என்றும் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை. ஆனால் சமூகவலைத்தளங்களில் 'பசுமை பட்டாசுகள் பச்சையாக இருக்கும்' என்று இரண்டு நாட்களாக மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
தீபாவளி நெருங்கும் நேரத்தில், இப்படி ஒரு தீர்ப்பு வெளியாகி இருப்பதால் பட்டாசு விற்பனையாளர்களும் சரி, பொதுமக்களும் சரி பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.