லென்ஸ் அணிந்ததால் கருவிழி பாதிக்கப்பட்டு பார்ப்பதிலும், உறங்குவதிலும் சிரமம் ஏற்பட்டதாக நடிகை ஜாஸ்மீன் பசீன் பகிர்ந்திருக்கிறார்.
கண்களில் ஏதோ பிரச்னை காரணமாக கண்ணாடி போட வேண்டிய நிலை வரலாம். இப்போது கண்ணாடிக்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதையே பலரும் விரும்புகிறார்கள். சிலர் வெறும் அழகுக்காக மட்டும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதுண்டு. அப்படி உபயோகிக்கும்போது அதைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
நீங்களும் கண்களில் லென்ஸ் அணிபவரா? அப்படியானால் கான்டாக்ட் லென்ஸ் அணியும் போது உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ள கண் மருத்துவ நிபுணர்கள் சொல்லும் சில அறிவுரைகள் இங்கே…
எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று லென்ஸ் அணிய வேண்டும். லென்ஸ் தவறி விழுந்தாலும், கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.
மிக முக்கியமாக லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கிவிட்டால் அது கண்களில் இன்பெக்ஷனை ஏற்படுத்தலாம். கண்களைக் கசக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். லென்ஸை கழற்றிய பிறகும் கண்களில் அரிப்பும் எரிச்சலும் இருப்பதாக உணர்வார்கள்.
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை முறையாக அதற்கான லிக்குவட் கொண்டு சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும். லென்ஸ் வைப்பதற்கென கொடுக்கப்படும் பாக்ஸில் அதை ஃப்ரெஷ்ஷான லிக்குவைடில் ஊறவைக்க வேண்டும்.
கான்டாக்ட் லென்ஸ் முறையாகப் பராமரிக்காவிட்டால் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பார்வையையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம். உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும், என்று அறிவுறுத்துகின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“