/indian-express-tamil/media/media_files/2025/04/23/ggSvQJhrRpwUlevcD8qL.jpg)
Eye health
நம்மில் பெரும்பாலோர் நமது நாளின் பாதிக்கு மேல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில் செலவிடுகிறோம். இது இயற்கையாகவே நம் கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
லேப்டாப் ஸ்கீரின் முன் நீண்ட நேரம் செலவிடுவது கண் எரிச்சல், கண் சோர்வு மற்றும் பிற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது வறண்ட, அரிக்கும் கண்களை ஏற்படுத்தும். இதை தடுக்க, நீங்கள் டிஜிட்டல் ஸ்கீரினில் செலவிடும் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் 20 வினாடிகள் சிறிய இடைவெளி எடுக்கவும். அந்த நேரத்தில், 20 அடி தூரத்தில் பார்க்கவும்.
இப்படி செய்வதால் டிஜிட்டல் ஸ்கீரினில் நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் கண் அழுத்தத்தைக் குறைக்கலாம். 
இதுதவிர கண் பிரச்னைகள் வராமல் தடுக்க சில குறிப்பிட்ட உணவுகளை கண்டிப்பாக உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். 
கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள். அதேபோல பொன்னாங்கண்ணிக் கீரையை கூட்டு, பொரியல், துவையல் என 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது பார்வைத் திறனை மட்டுமல்ல, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 
முக்கியமாக கண்கள் வறண்டு போவதை தடுக்க உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். 
எல்லா வயதினரும் வாரத்தில் 2 நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்ப்பது என்பது தலையில் ஆரம்பித்து உடல் முழுவதும், பாதம் வரை தேய்க்க வேண்டும். உடம்பில் இருக்கும் நவதுவாரங்களிலும் எண்ணெய் படும்போது, ஒவ்வொரு துவாரம் வழியாக, உடலில் இருந்து சூடு வெளியேற ஆரம்பிக்கும். 
எப்போதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். கோடைக்காலத்திலும் கூட. இப்படி குளித்தால் மட்டும் தான் உடம்பில் இருக்கும் சூடு தணியும். அதன் முழு பலனும் கிடைக்கும். 
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் ஹெவியான சாப்பாடு எடுக்காமல், பகலில் தூங்காமல் இருந்தால் கண் பார்வை அதிகரிக்கும். 
காஸ்மோ ஹெல்த் யூடியூப் சேனலில், டாக்டர் மோனிகா கண் பார்வை அதிகரிக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ
கண்ணில் சிவப்பாகவோ, வலியோ, உறுத்தலோ அல்லது பார்வை மங்கல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. மேலும், நம் உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பிரச்னை இருந்தாலும், அது கண்களில் எதிரொலிக்கும். 
எனவே சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெறுவது நல்லது. அதனால், பார்வை பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். 
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us