செவ்வாய் தோஷம் பற்றிய உண்மைகள்

செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு மண வாழ்க்கை தள்ளிப் போகும். இதனால் அவர்கள் படும் அவஸ்தைகள் அதிகம். செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதை கட்டுரை சொல்கிறது.

சரவணக்குமார்

‘வரும்… ஆனால் வராது’ என்பது வடிவேலுவின் பிரபல காமெடி. அதே கதைதான் இங்கும். செவ்வாய் தோஷம் இருக்கு, ஆனால் இல்லை.

‘என்ன இது ஒரே குழப்பமாக இருக்கே’ என்கிறீர்களா? சொல்ல வந்ததை தெளிவாகவே சொல்லிவிடுகிறேன்.

அதற்கு முன்னால் செவ்வாயின் குணத்தை குறிக்கும் குட்டி விஷயத்தை கண்டுவிட்டு உள்ளே செல்வோம்.
இவர் சந்திரனுடனோ, சுக்கிரனுடனோ சேர்ந்திருந்தாலும், லக்கினத்தில் இருந்தாலும் உடலுறவில் அதிக இச்சையை எற்படுத்திவிடுவார். இந்த இணைவானது 3, 7, 12 போன்ற இடங்களில் இருந்தால், இன்னும் வில்லத்தனம் தான். அந்த நபருக்கு ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணக்கும்’. சதா சர்வ காலமும் ‘அந்த’ நினைப்பிலேயே பிழைப்பு ஓடும். இப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களிடம்- அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சற்று தள்ளிப் பழகுவதே நல்லது.

இப்படி ஒருபுறம் வில்லனாக இருக்கும் செவ்வாய் மற்றொருபுறம் வீரம், காவல்துறை போன்ற பல நல்ல விஷயங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, தான் ரொம்ப நல்லவராகவும் காட்டிக்கொள்கிறார்.

ஒகே… செவ்வாய் பற்றிய சிறு குறிப்பை முடித்துக்கொண்டு அவர் அளிக்கும் தோஷத்திற்குள் நுழைவோம்.
1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக கருதப்படும். இதை லக்கினத்திலிருந்து மட்டும் பார்க்காமல் சந்திரன், சுக்கிரனில் இருந்தும் பார்க்க வேண்டும். இந்த விதியை மட்டும் பிடித்துக்கொண்டு, உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாக பல ஜோதிடர்கள் சொல்லி இருப்பார்கள். இதனால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவித்து பார்த்தவர்களுக்குத்தான் அந்த வலியும், வலி சார்ந்த வேதனையும் தெரியும். பலருடைய மணவாழ்க்கை இதனால் தள்ளிப்போயிருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலே சொன்னது பொதுவான விதி தான். இதற்கு விதிவிலக்கும் உண்டு என்பதை, ஏனோ பலரும் மறந்துவிடுகின்றனர்.

இந்த விதிவிலக்குகளை கருத்தில் கொண்டு ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால், 100 க்கு 90 ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் அடிபட்டுவிடும். அதைப் பற்றி பார்ப்போம்.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது.

மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அது 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றாக வந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது.

சூரியன், புதன், குரு, சனி, ராகு, கேது முதலிய கிரகங்களில் ஏதோ ஒன்றுடன் செவ்வாய் இணைந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ தோஷம் இல்லை.

செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி, லக்கினத்திற்கு கேந்திரத்திலோ (1, 4, 7, 10) அல்லது திரிகோணத்திலோ (5, 9) இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

செவ்வாய் மற்ற கிரகங்களுடன் பரிவர்த்தனையில் இருந்தாலும் தோஷமில்லை. அதாவது செவ்வாயின் சொந்த வீடுகளாகிய மேஷம், விருச்சிகத்தில் ஏதேனும் கிரகங்கள் அமர்ந்திருக்க, அந்த கிரகத்தின் வீட்டில் செவ்வாய் இருப்பது பரிவர்த்தனை எனப்படும். உதாரணத்திற்கு சனி விருச்சிகத்தில் இருக்க, செவ்வாய் கும்பத்தில் இருப்பது பரிவர்த்தனை யோகமாகும்.

இந்த ஐந்து விதிவிலக்குகளையும் வைத்துக்கொண்டு உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா, இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close