/indian-express-tamil/media/media_files/2025/05/09/MCXCyohkq9qjX2wDkELR.jpg)
பொதுவாக இளநீர் ஒரு நீரேற்றமான மற்றும் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா என்ற கவலைகள் நிலவுகின்றன. இந்நிலையில், நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் சிவ சுந்தர் இதன் விளைவுகளைத் தன்னிடமே பரிசோதித்துப் பார்த்தார். "இளநீர் குடித்த அரை மணி நேரத்திற்குள் இரத்த சர்க்கரை அளவு 100 mg/dL வரை அதிகரித்தது. இதில் பொட்டாசியம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நல்லதுதான். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கத்தக்கது அல்ல. உடற்பயிற்சி செய்த பிறகு மிதமான அளவில் இளநீர் குடிப்பது நல்லது" என்று மருத்துவர் சிவா கூறினார்.
குறிப்பாக, இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரத் புய் கூறுகையில், "இளநீரில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. அடிக்கடி நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுபவர்களுக்கு இது சிறந்தது. கலோரிகள் குறைவாக இருப்பதால், இளநீர் உங்களை சுறுசுறுப்பாக உணர வைக்க உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
உணவு நிபுணர் மோஹினி டோங்ரே இது குறித்து கூறுகையில், "இளநீரில் உள்ள அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இதனால் இருதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம். இளநீரில் ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கட்டற்ற மூலக்கூறுகளை நடுநிலையாக்குவதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கக்கூடும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா?
மரேங்கோ ஆசியா மருத்துவமனை குருகிராமத்தின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவு நிபுணர் பர்மீத் கவுர் கூறுகையில், "இளநீர் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா இல்லையா என்பது உட்கொள்ளும் அளவு மற்றும் தனிநபரின் உடல்நல நிலையை பொறுத்தது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளின் விஷயத்தில் பல காரணிகள் உள்ளன" என்று அவர் கூறினார்.
மேலும், "இளநீரில் இயற்கையாக உள்ள சர்க்கரைகளான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ், அதிகமாக உட்கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். ஒரு கப் (240 மில்லி) இளநீரில் பொதுவாக 6-7 கிராம் சர்க்கரை உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் (GI) கொண்டுள்ளது. அதாவது அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளுடன் ஒப்பிடும்போது, இது இரத்த சர்க்கரையை படிப்படியாகவும், மெதுவாகவும் உயர்த்துகிறது" என்று டாக்டர் கவுர் கூறினார்.
நீரிழிவு நோய் இருந்தால் இளநீர் உட்கொள்ளும்போது அளவைக் கவனிப்பது முக்கியம். "இது ஒரு சீரான உணவில் மிதமான அளவில் சேர்க்கப்படலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்காது. ஆனால், அதிகமாக உட்கொண்டால் இரத்த குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமாக உயரக்கூடும்," என்று கவுர் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.