ஒருவரின் உண்ணாவிரத ரத்த சர்க்கரை 114 mg/dL ஆக இருந்தால், அது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள வரம்பிற்குள் வருகிறது, பொதுவாக, உணவுக்கு முன் குளுக்கோஸ் அளவு 100 முதல் 125 mg/dL வரை இருக்கும். எனவே, உங்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை இருப்பது கண்டறியப்பட்டால், இது ஒரு முக்கியமான விழித்தெழுவதற்கான அழைப்பு. "நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது, ஆனால் டைப் 2 நீரிழிவு என்று வகைப்படுத்தப்படும் அளவுக்கு அதிகமாக இல்லை. சரியான நேரத்தில் மற்றும் சீரான நடவடிக்கையுடன், நீங்கள் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்," என்று ஸாண்ட்ரா ஹெல்த்கேர் நீரிழிவுப் பிரிவின் தலைவரும், ரங் தே நீலா திட்டத்தின் இணை நிறுவனருமான டாக்டர். ராஜீவ் கோவில் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க:
நல்ல செய்தி என்னவென்றால், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களை சீரான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பெரும்பாலும் நிர்வகிக்கலாம், ஏன் குணப்படுத்தவும் முடியும் என்று சி.கே. பிர்லா மருத்துவமனை, டெல்லி, உள் மருத்துவப் பிரிவின் இயக்குனர் டாக்டர். மனிஷா அரோரா தெரிவித்தார்.
உணவில் கவனம் செலுத்துங்கள்
சமச்சீரான, சத்து நிறைந்த உணவுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தொடங்கவும். "அதாவது, உங்கள் உணவில் நிறைய காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்க வேண்டும். சர்க்கரை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேட்டுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை ரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். ஒருவர் சரியான அளவு மற்றும் பசியின் அறிகுறிகளில் கவனம் செலுத்தும் விழிப்புணர்வுள்ள, கவனமான உணவு, சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டையும் ஆதரிக்கும்" என்று டாக்டர் அரோரா கூறினார்.
வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சிகளை இலக்காகக் கொள்ளுங்கள், அதாவது வேகமாக நடப்பது, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல். "இதை வாரத்திற்கு ஐந்து நாட்கள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் எனப் பரப்பலாம். தசை வலுப்படுத்தும் செயல்பாடுகளை (எதிர்-பயிற்சி, ஸ்குவாட்ஸ் அல்லது சுவர்ப் புஷ்-அப்கள் போன்றவை) வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சேர்ப்பது இன்சுலின் உணர்திறனை கணிசமாக மேம்படுத்தும் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்" என்று டாக்டர் அரோரா கூறினார்.
உடல் எடையை நிர்வகிக்க வேண்டும்
ஒருவர் அதிக எடை கொண்டவராக இருந்தால், அவர்களின் உடல் எடையில் 5-10 சதவிகிதம் குறைந்தாலும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதிலும், டைப் 2 நீரிழிவு நோய்க்கு முன்னேறும் அபாயத்தைக் குறைப்பதிலும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். "உங்கள் உடல் எடையில் 5-7 சதவிகிதம் குறைப்பது உங்கள் அபாயத்தை கணிசமாக குறைக்கும். 80 கிலோ எடை கொண்ட ஒருவருக்கு, இது வெறும் 4-6 கிலோ தான்" என்று டாக்டர் கோவில் பகிர்ந்து கொண்டார்.
தூக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல்
நல்ல தரமான தூக்கம், இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். "மோசமான தூக்கம் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாகப் பாதிக்கலாம். தடையற்ற ஓய்வை இலக்காகக் கொள்ளுங்கள் மற்றும் சீரான தூக்க அட்டவணையைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை நிர்வகிப்பதும் சம அளவில் முக்கியம், ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசால் அளவை அதிகரிக்கிறது, இது ரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா, வாசிப்பு அல்லது இயற்கையில் நேரம் செலவிடுதல் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள், எது அவர்களுக்கு நிம்மதி அளிக்கிறதோ அதைச் செய்யுங்கள்" என்று டாக்டர் அரோரா கூறினார்.
உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும்
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்க்கவும். ஒரு நபர் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர் அரோரா பகிர்ந்து கொண்டார். "ஒவ்வொரு மணி நேரமும் குறுகிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள், எழுந்திருங்கள், நீட்டிக்கவும், சுற்றி நடக்கவும் அல்லது சில எளிய அசைவுகளை செய்யவும். ஒவ்வொரு மணி நேரமும் 5 நிமிடங்கள் லேசான செயல்பாடு கூட இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று டாக்டர் அரோரா கூறினார்.
நீங்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால், அது நீரிழிவு நோயை நோக்கி முன்னேறும் என்று டாக்டர் கோவில் எச்சரித்தார். "சாதாரண இரத்த சர்க்கரை உள்ளவர்களைக் காட்டிலும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் மிக அதிகமாக உள்ளது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று டாக்டர் கோவில் கூறினார்.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை பொதுத் தகவல் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.