முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது வெந்தயம். வெந்தயத்தில் இருக்கும் இரும்பு சத்து மற்றும் புரதம் ஆகியவை முடிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் வழங்குகிறது. இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயம் கொண்டு ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை, வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். இது நம் முடி முழுவதும் பயன்படுத்துவதற்கு தாராளமாக இருக்கும்.
இதன் பின்னர், ஒரு துண்டு இஞ்சியை நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து துருவிய இஞ்சியை பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்த இஞ்சிச் சாறை முன்னர் அரைத்து எடுத்த வெந்தயத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். இஞ்சிச் சாறை வெந்தயத்துடன் சேர்த்து பயன்படுத்துவதால் தலையில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. அதே சமயம் இஞ்சிச் சாறை தனியாக தலையில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் முடிக்கு பயன்படுத்தும் எண்ணெய் கொண்டு முதலில் தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இது நன்றாக ஊறியதும், வெந்தயம் மற்றும் இஞ்சிச் சாறு கலவையை தலை முடியின் வேர்ப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை தேய்க்க வேண்டும். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து சீவக்காய் போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் தலை முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும். மேலும், பொடுகு தொல்லையையும் கட்டுப்படுத்தி விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“