/indian-express-tamil/media/media_files/2025/10/10/download-18-2025-10-10-17-37-34.jpg)
பாம்பு கடிதல் என்பது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்க்கையை அச்சுறுத்தக்கூடிய அவசர நிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்தச் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படக் கூடியவை. ஆனால், பாம்பு கடித்தவுடன் சரியான முறையில் முதலுதவி அளித்தால் உயிர் காக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என மருத்துவர் சரண்யா விளக்குகிறார்.
அவர் கூறுகையில், "பாம்பு கடிக்கு உடனடி மருத்துவ உதவியுடன், அவ்வளவாகவே முக்கியமானது முதற்கட்ட முதலுதவி. இந்த நிலையில் நம்மால் செய்யக்கூடிய சில எளிய செயல்கள், கடித்த நபரின் உயிரைக் காக்க உதவக்கூடும்" என்றார்.
பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை:
அமைதியாக இருக்க உதவுங்கள்:
பாம்பு கடித்த நபர் அமைதியாகவும் பதற்றமின்றியும் இருக்க வேண்டும். அவர்கள் அசையாமல் இருக்கச் செய்யுங்கள். நரம்பியல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் வேகமான மாற்றங்கள் விஷத்தை உடலுக்குள் விரைவாக பரவுவதற்கு வாய்ப்பு தரும்.
காயத்தைக் கழுவுங்கள்:
கடித்த பகுதியில் உள்ள மாசுபாடுகளை அகற்ற மிகவும் முக்கியமானது. காயத்தை சோப்பும், ஓடும் நீருமாக மூன்று முறை அல்லது அதற்கு மேல் கழுவ வேண்டும். இது பாக்டீரியா தொற்றைத் தவிர்க்க உதவும்.
அழுத்தக் கட்டு போடுங்கள்:
காயத்தைச் சுற்றி லேசாக அழுத்தக் கட்டு போடலாம். ஆனால், மிகவும் இறுக்கமாகக் கட்டக் கூடாது. இறுக்கமாக கட்டும்போது, விஷம் ஒரு இடத்தில் தங்கி, அந்த இடம் அழுகுவதற்கும் வாய்ப்பு உண்டு.
உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள்:
முக்கியமானது – மருத்துவ உதவி! கடித்த நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லவேண்டும். அருகில் ஆம்புலன்ஸ் வசதி இருந்தால், உடனே அழைக்க வேண்டும். நேரம் தாமதிக்க வேண்டாம்.
பாம்பு கடிக்கப் பிறகு தவறவிடக்கூடாத சில விஷயங்கள்:
- கடித்த இடத்தை உறிஞ்சக் கூடாது:
விஷத்தை உறிஞ்சுவதால் அது வாய் வழியாக பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் இன்னும் பெரிய ஆபத்து ஏற்படலாம். - அதிகமாக இறுக்கமாக கட்டக் கூடாது:
இரத்த ஓட்டம் முற்றிலும் தடைபட்டால், அந்தப் பகுதி மங்கலாகிவிடும். - காஃபி, டீ போன்ற பானங்கள் தவிர்க்க வேண்டும்:
இவை ரத்த ஓட்டத்தை தூண்டி, விஷம் உடலுக்குள் விரைவாக பரவச் செய்யக்கூடும்.
"பாம்பு கடித்துவிட்டால் பயப்பட வேண்டாம். பதற்றத்திற்கு ஆட்படாமல், தூண்டிவிடாமல், சரியான முறையில் முதலுதவி அளித்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தவறான நம்பிக்கைகள் அல்லது பழங்கால முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்," என்று மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.
பாம்பு கடித்தால் – சரியான நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும். வாழ்க்கையை பாதுகாக்கும் முதல் படியாக, நம்மிடமிருந்து தொடங்கும் விழிப்புணர்வே முக்கியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.