சுவையான, சிம்பிளான மீன் குருமா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மீன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிதளவு
அரைத்த தேங்காய் - 1/2 மூடி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோம்பு - 3/4 டீஸ்பூன்
முந்திரி - 6
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து மூன்றாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறி கொள்ளுங்கள்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து மேலும் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்து அதனுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குருமா கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்க்கவும். மீன் வெந்தவுடன் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மீன் குருமா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“