/indian-express-tamil/media/media_files/2025/08/18/gps-better-than-google-maps-2025-08-18-15-51-10.jpg)
இயற்கையின் ஜி.பி.எஸ்.: கூகுள் மேப்-ஐ விடச் சிறந்த திசைத்திறன் கொண்ட 5 விலங்குகள்!
எந்தவொரு ஜி.பி.எஸ். சாதனமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குத் துல்லியமாக செல்லும் திறனைக் கொண்ட சில உயிரினங்கள் உலகில் உள்ளன. நவீன ஜி.பி.எஸ் கருவிகளை விடவும் துல்லியமாக அவை இந்தப் பணியைச் செய்கின்றன. சிறு பூச்சிகள் முதல் கடல்வாழ் உயிரினங்கள் வரை, பல உயிரினங்களுக்கு இயற்கையே இந்த அற்புதமான ஜி.பி.எஸ்.அமைப்பை வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட 5 விலங்குகள் பற்றி பார்ப்போம்.
1. சால்மன் மீன் (Salmon)
உலகம் முழுவதும் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் சால்மன் மீன்கள், தங்கள் இயற்கைச் சூழலில் எளிதாகப் பயணிக்கக்கூடியவை. தங்கள் பெற்றோர் வழியாகப் பெற்ற, காந்தப் புலனறிதலே இவற்றின் திறனுக்குக் காரணம். அவை பிறந்த கணத்திலிருந்தே தாமாகவே வாழத் தொடங்குகின்றன. அவை வளர்ந்த பிறகு, தாங்கள் பிறந்த அதே நீரோடைக்கு திரும்பும். ஏனெனில், அதுவே இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடம் என்பதை அவை அறிந்திருக்கின்றன. இதற்காக, பூமியின் காந்தப்புலனை ஒரு திசைகாட்டி போலப் பயன்படுத்துகின்றன. தாங்கள் பிறந்த ஆற்றைக் கண்டறிந்ததும், தங்கள் மோப்ப உணர்வைப் பயன்படுத்தித் துல்லியமான இடத்தைக் கண்டறிகின்றன.
2. கடல் ஆமைகள் (Sea Turtles)
பிரம்மாண்டமான கடலில் வழிசெலுத்தும் மற்றொரு கடல்வாழ் உயிரினம் கடல் ஆமைகள். இவை, பூமியின் காந்தப்புலனை ஒரு இயற்கையான திசைகாட்டி போல பயன்படுத்துகின்றன. கடற்கரையின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காந்தப் புலக் கையொப்பங்கள் (magnetic signatures) இருக்கும். ஆமைகள் இந்தக் காந்தக் குறியீடுகளை நினைவில் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடங்களுக்குத் திரும்புகின்றன. சால்மன் மீன்களைப் போலவே, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்த பின்னரும், தாங்கள் பிறந்த அதே கடற்கரைக்குத் துல்லியமாகத் திரும்புகின்றன.
3. சாண வண்டுகள் (Dung Beetles)
சாண வண்டுகள் வழிசெலுத்தும் விதம் அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம், ஆனால் உண்மை. இந்தச் சிறிய பூச்சிகள் நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தின் (Milky Way galaxy) உதவியுடன் வழிசெல்கின்றன. அவற்றின் முக்கிய உணவு விலங்குகளின் சாணம். சாணத்தை கொண்டு உருண்டையை உருவாக்குகின்றன. பின், சில விநாடிகள் சடங்கு போலச் செய்து, சூரியன், சந்திரன் மற்றும் பால்வெளி மண்டலத்தின் உதவியால் சரியான பாதையைத் தீர்மானித்து, பயணிக்கத் தொடங்குகின்றன.
4. அஞ்சல் புறாக்கள் (Homing Pigeons)
அஞ்சல் புறா மேகமூட்டமான நாட்களில், பூமியின் காந்தப்புலனைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கின்றன. அதே சமயம், வானம் தெளிவாக இருக்கும்போது, சூரியனின் நிலையைப் பயன்படுத்திப் பயணிக்கின்றன. மேலும், சூரியனின் நகர்வை அவற்றின் உள்ளமைக்கப்பட்ட உயிரியல் கடிகாரத்தைப் (internal circadian clock) பயன்படுத்திச் சரிசெய்து கொள்கின்றன. இந்தப் பறவைகள் தங்கள் சுற்றுப்புறத்தின் 'வாசனைப் படங்களை' (odour map) உருவாக்குகின்றன. இதன் மூலம் காற்றால் அடித்து வரப்படும் வாசனைகளைத் திசையுடன் தொடர்புபடுத்துகின்றன.
5. திமிங்கிலங்கள் (Whales)
திமிங்கிலங்களும் பூமியின் காந்தப்புலனை உணர்ந்து, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவிற்குத் திறந்த கடலில் வழிதவறாமல் பயணிக்கின்றன என்று நம்பப்படுகிறது. கூன்முதுகு திமிங்கிலங்கள் (Humpback whales) ஒவ்வொரு ஆண்டும் 16,000 கி.மீ. வரை பயணிக்கின்றன. வெப்பமான இனப்பெருக்க இடங்களுக்கும், குளிர்ச்சியான துருவப் பகுதிகளுக்கும் இடையே இவை பயணிக்கின்றன. காந்தப்புலங்களைத் தவிர, சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் கடலில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒலிகளையும் கூட இவை வழிசெலுத்தப் பயன்படுத்துகின்றன என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.