சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நோயை கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த ஆழமான புரிதல் தேவைப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு முதல் உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். இது குறித்த தெளிவான தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் கனிக்கா மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Five game-changing tips to manage diabetes in 2025
1. அடுத்த உணவின் விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் எடுத்துக் கொள்ளும் இப்போதைய உணவை பொறுத்து தான் உங்கள் உடல் அடுத்த உணவை எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்பதை நீங்கள் அறிவீர்களா? "புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவை சீராக்குவதுடன், உங்களது அடுத்த உணவிற்கான க்ளைசெமிக் தன்மையை நிர்வகிக்கும். எனவே, அதற்கு ஏற்றார்போல் உணவு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
2. உணவருந்தும் நேரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
"நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை போலவே, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும், எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். கார்போஹைட்ரேட்டுகளுக்கு முன் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கும். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீரமைக்கும்.
3. உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
சர்க்கரை நோயாளிகள் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனினும், உடற்பயிற்சி செய்யும் நேரத்தை போன்று அதன் பயன்களும் மாறுபடும். "உணவுக்கு முன் நடைபயிற்சி போன்ற லேசான செயல்களில் ஈடுபடுவது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வது குளுக்கோஸ் அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது.
4. சீரான உறக்கம் மிக அவசியம்
சராசரியாக 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியமாகும். இது பசியை கட்டுப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
5. குறைந்த கலோரி கொண்ட பானங்களை பருக வேண்டும்
தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் போன்றவற்றை பருகுவதும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சர்க்கரை கலந்த பானங்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.