/indian-express-tamil/media/media_files/2025/04/29/MU2GKz3OJhvbX1lcOiFu.jpg)
நரை முடியை மீண்டும் கருமையாக்க முடியும் என்று இணையத்தில் பல வழிமுறைகள் கூறப்படுகின்றன. ஆனால், இவற்றில் உண்மைத் தன்மை இருக்கிறதா? இது குறித்து indianexpress.com-இடம் மருத்துவர் ஜெகதீஷ் ஹிரேமத், பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். "நரை முடியை இயற்கையாகவே மாற்றுவது குறித்து ஆன்லைனில் எண்ணற்ற கூற்றுக்கள் பரவி வருவதால், அத்தகைய தகவல்களை விமர்சன ரீதியாக அணுகுவது முக்கியம்" என்று அவர் கூறுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Five myths about reversing grey hair you need to stop believing
நரை முடியை இயற்கையாகவே மாற்ற முடியுமா அல்லது இந்தக் கூற்றுகள் பெரும்பாலும் ஆதாரமற்றவையா?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நரை முடியை மீண்டும் கருமையாக மாற்றுவது சாத்தியமில்லை என்று மருத்துவர் ஜெகதீஷ் ஹிரேமத் குறிப்பிடுகிறார். மெலனோசைட்டுகள் குறைவதால் நரை முடி ஏற்படுகிறது. வயது அல்லது மரபணு காரணிகளால் மெலனின் உற்பத்தி குறையும் போது நரை முடி உருவாகும்.
எந்த சூழலில் நரை முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியும்?
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது ஏதேனும் நோயின் தாக்கத்தால் நரை முடி ஏற்பட்டால், அப்பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம் முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியும் என்று மருத்துவர் ஜெகதீஷ் ஹிரேமத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் eLife இதழில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், வயதின் காரணமாக அல்லது மரபணு ரீதியாக முடி நரைத்தால், அதனை மீண்டும் கருமையாக மாற்றுவது சாத்தியமற்றது என்று மருத்துவர் ஜெகதீஷ் ஹிரேமத் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நரை முடியை கருமையாக மாற்றலாம் என்று இணையத்தில் உலா வரும் சில கூற்றுகள் முற்றிலும் போலியானவை என்று அவர் அறிவுறுத்துகிறார்.
1. வெங்காய சாறு தேய்த்தால் முடி கருமையாக மாறும் என்பதில் உண்மை இல்லை:
வெங்காய சாறு மெலனின் உற்பத்தியை மீட்டெடுக்கும் என்ற கூற்றுக்கு எந்தவித நம்பகமான ஆதாரமும் இல்லை. டெர்மட்டாலஜி ப்ராக்டிகல் & கான்செப்ச்சுவல் (2020) இன் மதிப்பாய்வு, வெங்காய சாறு நிறமி மீது நிரூபிக்கப்பட்ட விளைவைக் கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு முடியின் நிறத்தை மாற்றும் என்பதில் உண்மை இல்லை:
இது தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படலாம். ஆனால், முடியின் நிறத்தை இவை மாற்றும் என்று ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்படவில்லை.
3. கொலஜன் மருந்துகள் நரை முடியை மாற்றுமா?
கொலஜன் எடுத்துக் கொள்வது முடி வளர்ச்சியை வேண்டுமானால் அதிகரிக்கலாம். ஆனால், இவை மெலனின் உற்பத்திக்கு பங்களிக்காது. இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை.
4. ஷாம்பூ பயன்படுத்தாமல் இருந்தால் முடி நரைக்காதா?
ஷாம்புக்கள், மெலனோசைட்டுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது இயற்கையான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் பரப்பப்படும் தவறான தகவல்
5. சில மூலிகைகள் நரை முடியை மாற்றுமா?
நரை முடியின் நிறத்தை மாற்ற முடியும் என்று கூறப்படும் எந்த மூலிகைக்கும் அதற்கான அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை.
எனவே, இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என மருத்துவர் ஜெகதீஷ் ஹிரேமத் கூறுகிறார். ஆனால், சில சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நரை முடி உருவாவதை தாமதப்படுத்தலாம்.
அந்த வகையில், வைட்டமின் பி12, அன்டி ஆக்சிடென்ட்ஸ், இரும்புச் சத்து, சின்க் ஆகியவை நிறைந்த உணவுகள் சாப்பிடுவது முடி ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆகவே, இணையத்தில் பகிரப்படும் போலியான தகவல்களை நம்பி பணம் மற்றும் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.