காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு உட்கொள்வதில் நீண்ட இடைவெளி இருப்பதால், உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். எனவே, வெறும் வயிற்றில் நாம் செய்யும் செயல்கள் நிச்சயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா, தனது சமூக ஊடக கணக்கில் சுகாதார குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டது மட்டுமின்றி வெறும் வயிற்றில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
காஃபி தவிர்ப்பது நல்லது
உங்களின் காலை போழுது ஒரு கப் காஃபி இல்லாமல் நிச்சயம் விடியாது. ஆனால், அதனைக் குடிப்பதற்கு முன்பு இருமுறை யோசியுங்கள். வெறும் வயிற்றில் காபி குடிப்பது அமிலத்தன்மையைத் தூண்டுகிறது, இது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பைத் தூண்டுகிறது.
மதுபானங்கள்
வெறும் வயிற்றில் குடிக்கும் ஆல்கஹால் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆல்கஹால் ரத்த ஓட்டத்தில் சென்றதும், விரைவாக முழு உடலுக்கும் பரவுகிறது. இதனால், ரத்த நாளங்கள் விரிவடைந்து உடலின் வெப்ப அளவு அதிகரிக்கிறது. பல்ஸ் ரெட் மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது. இது வயிறு, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் மற்றும் இறுதியாக மூளைக்குச் செல்கிறது. ஒரு நபர் குடிக்கும் ஆல்கஹாலில் 20 சதவிகிதம் வயிற்றுக்கு சென்றதும் ஒரு நிமிடத்திற்குள் மூளையை அடைந்துவிடுகிறது. அதே சமயம், உணவு அருந்திய பிறகு நாம் குடிக்கும் ஆல்கஹாலின் அளவு மூளைக்குச் செல்வது குறைகிறது. உடலில் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது.
Gum
வெறும் வயிற்றில் சூயிங் கம் சாப்பிடுவது ஒரு நல்ல யோசனை அல்ல. ஏனெனில் கம் மெல்லுதல் உங்கள் செரிமான அமைப்பிலிருந்து அதிகளவில் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அமிலம் வயிற்றின் உட்பகுதியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். அச்சமயத்தில், வயிற்றில் உணவு இல்லாத போது, அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஷாப்பிங்
கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு நடத்திய இரண்டு ஆய்வு முடிவுகளின்படி, வெறும் வயிற்றில் ஷாப்பிங் செல்பவர்கள் தேவைக்கு அதிகமாக ஷாப்பிங் செய்வதோடு மட்டுமல்லாமல் அதிக கலோரி உணவு வாங்கி சாப்பிடுவது உறுதியாகியுள்ளது.
வாக்குவாதம் செய்யாதீர்கள்
நீங்கள் இன்னொரு நபருடன் வாக்குவாதம் செய்ய செல்வதற்கு முன்பு, உணவு அருந்துவது நல்லது. ஏனென்றால், வெறும் வயிற்றில் கோபம் கொள்பவர்கள் ஹைபோகைசீமியா(ரத்தச் சர்க்கரைக் குறைவு) நோயால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.காலையில் உணவு சாப்பிடுதல் கோபத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஸ்டெராய்டல் அல்லாத மருந்துகள்
வெறும் வயிற்றில் ஸ்டெராய்டல் அல்லாத மருந்துகளை (Non-steroidal anti-inflammatory drugs) உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வெறும் வயிற்றில் இத்தகைய மருந்துகளை சாப்பிடுவது, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. நீண்ட காலம் வெறும் வயிற்றில் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு இரைப்பை அழற்சி, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், அல்சர் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்தப்போக்கு போன்றவை ஏற்படலாம் என தெரிவிக்கிறார்.