Food For Diabetics: தற்போது நீரிழிவு பிரச்னை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடும் தீவிரமாக இருக்கும். நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம்.
நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைக்கலாம். நோயாளியின் வயது, உயரம், எடை, ஆண், பெண் உடலுழைப்பின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டே, அவரது உணவு முறையை தீர்மானிக்க வேண்டும்.
ஒருவரது உடல் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில் தினமும் ஒருவருக்கு புரதம் தேவைப்படுகிறது. உடலில் ஏதேனும் நோய், குறைபாடு இருப்பின், இந்த அளவில் மாறுதல் தேவைப்படலாம். இப்போது உணவு முறையை பார்க்கலாம்....
இட்லி
வெறும் அரிசி, உளுந்து அரைத்து, இட்லி செய்வதற்கு மாற்றாக காஞ்சிபுரம் இட்லி, சிறுதானிய இட்லி செய்யலாம். இட்லி மாவுடன் விருப்பமான காய்கறிகளில் மசாலா சேர்த்துக் கலந்து இட்லி, தோசை, பணியாரம் செய்யலாம்.
சப்பாத்தி
சப்பாத்தி மாவுடன், வேக வைத்த பருப்பு, கடலை மாவு, சோயா மாவு சேர்த்து கூட விருப்ப மான காய்கறி துருவியது, மசாலாப்பொடிகள் சேர்த்துப்பிசைந்து சப்பாத்தி செய்யலாம்.
சப்பாத்தி மாவில் காய்கறிக்குப்பதிலாக கீரை வகைகள், முட்டை, கைமா என பலவிதமான பொருட்களைச் சேர்க்கலாம்.
காய்கறி மசாலாவைத்தனியே தயாரித்து திரட்டிய சப்பாத்தி மீது வைத்து மடித்தும் சப்பாத்தி செய்யலாம்.
சுண்டல்
சிப்ஸ் வடை போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களுக்குப் பதிலாக சுண்டல், ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டை, டோக்ளா போன்றவற்றை உண்ணலாம். அவல், நெல்பொரி போன்றவற்றுடன் துருவிய காய்கறி சேர்த்து chat ஆக சாப்பிடலாம். வெள்ளரி, கேரட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
கார்போஹைட்ரேட் உணவு
கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும்போது அவற்றோடு சேர்த்து அதிக காய்கறி உணவுகளைச் சாப்பிடலாம். சமைக்கும்போது அதிக காய்கறி மற்றும் பருப்பு வகைகளைச் சேர்க்கலாம்.
சாலட்
சாலட் எடுத்துக் கொள்ளுங்கள் சாலட் ஒரு மிகச்சிறந்த உணவாகும். அதிலும் காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்கள் அடங்கிய சாலட் உங்களுக்கு நிறைய நன்மைகளை அளிக்கும். இதில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கீரை மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள்.
மதிய உணவிற்கு முன் அல்லது இரவு உணவில் முன் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்க்க மறந்து விடாதீர்கள். வினிகர் சேர்ப்பதால் உணவிலிருந்து உறிஞ்சப்படும் சர்க்கரை அளவு குறையும் இதனால் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேராமல் நீரழிவு வருவது தடுக்கப்படும்.