Food Recipes In Tamil, Coconut Milk Rice Tamil Video: தேங்காய்ப் பாலை கொழுப்புச் சத்து மிகுந்த ஒரு வேண்டாத உணவுப் பொருளாக சிலர் நினைக்கிறார்கள். நிஜம், அப்படியல்ல. வயிற்றுப் புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தணியவும் தேங்காய்ப் பால் அற்புதமான உணவுப் பொருள்.
தேங்காய்ப் பாலை பயன்படுத்தி பல்வேறு உணவுப் பொருட்களை நாம் தயார் செய்ய முடியும். தேங்காய்ப் பால் சாதம் சிம்பிளாக, அதே சமயம் டேஸ்டியாக எப்படி தயார் செய்வது? என்பதை இங்கு பார்க்கலாம்.
Coconut Milk Rice Tamil Video: தேங்காய்ப் பால் சாதம்
தேங்காய்ப் பால் சாதம் தயார் செய்யத் தேவையான பொருட்கள்: அரிசி – 2 கப், தேங்காய் – அரை மூடி, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, இஞ்சி- பூண்டு விழுது – கால் டீ ஸ்பூன், பட்டை – 3, லவங்கம் – 5, ஏலக்காய் – 3, பிரியாணி இலை – 2, கறிமசால் பொடி – கால் டீ ஸ்பூன், முந்திரி – 50 கிராம், நெய் – 100 கிராம், புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.
தேங்காய்ப் பால் சாதம் செய்முறை :
முதலில் தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்துக் கொள்ளவும். மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
பின்னர் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விடுங்கள். அடுத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். இத்துடன் கொத்தமல்லி இலையை சேர்க்கவும். கமகம மணத்துடன் தேங்காய்ப் பால் சாதம் ரெடி!
தேங்காய்ப் பால் சாதத்துடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் ரொம்பவே சுவையாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். முயற்சித்துப் பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“