வெற்றி என்றால் என்ன? ஆச்சரியத் தகவல்களை அள்ளி வீசும் புதிய சர்வே

"எது வெற்றி என்பதை விடுங்கள்.... நீங்கள் வெற்றிகரமான நபர்தானா?" என்ற கேள்விக்கு "ஆமாம்" என்று பதில் சொல்பவர்கள் ஐக்கிய அரபு குடியரசில்தான் அதிகம்.

ஆர்.சந்திரன்

“ஆரோக்கியமான உடலோடு, மகிழ்ச்சியும் சேர்ந்திருந்தால், அதுதான் வாழ்க்கையில் வெற்றி” என்பது பெருவாரி இந்தியர்களின் நம்பிக்கை என புதிய சர்வே முடிவு ஒன்றில் தெரிய வருகிறது. 72 சதவீத இந்தியர்களின் கருத்து இது என்றால், வேறு என்ன சொல்வது!

தொழில்முறை ஆட்களுக்காகவே இயங்கி வரும் சமூக வலைதளம் – “லிங்க்டு இன் (LinkedIn)”. தொழிலதிபர்கள், நிறுவன நிர்வாகிகள், உயரதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், பத்திரிகையாளர்கள் என, சமூக அந்தஸ்துள்ள இன்னும் பல துறையைச் சேர்ந்தவர்கள் இந்த வலைதளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். “வாழ்க்கையில் வெற்றி என நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்?” என்ற கேள்வி இதன் உறுப்பினர்களிடையேதான் முன்வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தியா, இந்தோனிஷியா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின், பிரேசில், ஐக்கிய அமீரகம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த 18 ஆயிரத்து 191 பேரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் 12ம் தேதி முதல், நவம்பர் 3ம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த சர்வேயின்படி, “மகிழ்ச்சியான வாழ்க்கை”தான் வாழ்க்கையின் வெற்றி என சொல்லும் 72% ஆட்களுக்கு அடுத்த நிலையில், 65 சதவீத வாக்குகளைப் பெறுவது “உடல் ஆரோக்கியம்”. மூன்றாவதாக, 57 சதவீதத்தினர் தேர்வு – அலுவலக வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டுக்குமான சமநிலை. ஆம்… இந்த சமநிலையைத் தக்க வைக்க முடிந்தால் அதுதான் வாழ்க்கையில் வெற்றி என்கிறார்கள். யதார்த்த வாழ்க்கையிலும் அறிவுஜீவிகளிடையே இந்த கருத்து இருப்பதை அதிகம் பார்க்க முடிகிறது. இதைத்தாண்டி, மீண்டும் சர்வே தகவலுக்கு வந்தால், தொடர்ந்து நல்ல சம்பள உயர்வு பெறுவதுதான் வெற்றி என 22 சதவீதத்தினர் பரிந்துரைக்க, 36 சதவீத ஆட்கள் 6 இலக்க சம்பளத்தை எட்டினால், வாழ்க்கை வெற்றிதான் என்கிறார்கள்.

“எது வெற்றி என்பதை விடுங்கள்…. நீங்கள் வெற்றிகரமான நபர்தானா?” என்ற கேள்விக்கு “ஆமாம்” என்று துணிச்சலாக பதில் சொல்பவர்கள் ஐக்கிய அரபு குடியரசில்தான் அதிகம். அங்கே வாழும் ஷேக்குகளின் பணியாளர்கள் இவர்கள் என்பது புருவத்தை உயர்த்த வைக்கிறது. இரண்டாவது இடத்தை பிரேசில் பெற, இந்தியர்களுக்கு 3வது இடம் கிடைக்கிறது.

“தற்போதுள்ள கடும் சவாலான சூழலைச் சமாளித்து, தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தையும் எதிர்கொண்டு, அடுத்த ஒராண்டில் நீங்கள் நம்பும் வெற்றி இலக்கை எட்டிவிடுவீர்களா?” என்ற கேள்விக்கு, நம்பிக்கையுடன் ‘ஆமாம்’ என சொல்லும் உலக சராசரி விகிதம் 5 சதவீதம்தான். வேறு சொற்களில் சொல்வதானால், மீதியுள்ள 95% ஆட்களுக்கு அடுத்த ஆண்டில் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை. அடுத்த ஆண்டில் வெற்றி சாத்தியம் என்பது, இந்தியர்களைப் பொறுத்தவரை, உலக சராசரியைப் போல, இரண்டு மடங்கு… அதாவது 10 சதவீதம் வரை. மீதியுள்ள 90% ஆட்களுக்கும் கூடுதல் காலம் தேவைப்படும் போல.

வெற்றியை எட்ட உதவும் காரணிகள் எவை என்ற கேள்விக்கு இந்தியர்கள் அளித்த பதிலில் 79% பேர் கல்விதான் என கூறியுள்ளனர். 61 சதவீதத்தினர் வயது (அதாவது, அனுபவம்) என பதில் சொல்ல, 56 சதவீதத்தினர் ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு வெற்றியை முடிவு செய்யும் காரணியாக இருப்பதாக தெரிவிக்கினறனர். மறுபுறம் 68 சதவீத ஆட்கள், நாம் பணி செய்ய தேர்வு செய்யும் துறைதான் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது என்ற பொருளில் பதில் அளித்துள்ளனர்.

வெற்றி என வரும்போது – தொழில்முறை வெற்றி முக்கியமா… சமூக அந்தஸ்த்து பெறும் வகையிலான புற உலக வெற்றி முக்கியமா… என்ற கேள்விக்கு சமூக வெற்றி என குறிப்பிடுவோர் குறைவு என்றே தெரிகிறது. இந்தியர்களில் 30% ஆட்கள் சமூக வெற்றிக்கு வாக்களிக்க, உலக சராசரி என பார்த்தால், அது 22% என இன்னும் சுருங்கிப் போகிறது.

இதுதவிர, வாழ்க்கையில் வெற்றி என நீங்கள் வேறு எதையெல்லாம் கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு இந்தியர்கள் – நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது… பரவலாக பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருப்பது… விரும்பிய பொழுதுபோக்குக்கு போதுமான நேரம் ஒதுக்க முடிவது போன்றவையும் வாழ்க்கையில் ஒருவர் வெற்றி பெற்றதன் அளவுகோல்களாக பார்ப்பதாக கூறியுள்ளனர். தொழில்முறை பயிற்சி பெற்ற வித்தகர்களுக்கே இதுதான் நிலை என்றால், மற்ற சாமானியர்களின் – வெற்றி பற்றிய கருத்துகள், இன்னும் எத்தனை புதிர்களை நம்முன் வீசுமோ!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close