வேகம் என்றதும் உங்கள் நினைவுக்கு சிவிங்கிப் புலியோ அல்லது பந்தயக் காரோ வரலாம். ஆனால், உலகிலேயே அதிவேகமான உயிரினம் ஒரு பறவை. அதுதான், பெரக்ரின் ஃபால்கன் (Peregrine Falcon). வேட்டையின்போது (stoop) மணிக்கு 386 கி.மீ (240 மைல்) வேகத்தை எட்டுகிறது. இது சாதாரண வேகமல்ல. இந்த வேகம், பாராசூட் வீரர் தடையின்றி கீழே விழும் வேகத்தைவிட அதிகம். மேலும், பெரும்பாலான ஜெட் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறக்கும் வேகத்தையும் விஞ்சிவிடும். பல சோதனைகளில், இந்த பறவையின் வேகம் மணிக்கு 320 கி.மீ-க்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவே விலங்குலகத்தின் வேகப் போட்டிக்கு சந்தேகமே இல்லாத சாம்பியன்.
இந்த பறவையால் எப்படி இவ்வளவு வேகத்தில் பறக்க முடிகிறது? பெரக்ரின் ஃபால்கனின் உடலமைப்பு இயற்கையான பொறியியல் அதிசயம். அதன் உடல் மெலிதாகவும், காற்றில் குறைந்த தடையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. கூர்மையான, நீண்ட இறக்கைகள் மற்றும் உறுதியான இறகுகள் காற்றைத் துண்டித்து வேகத்தை அதிகரிக்க உதவுகின்றன. ஆனால், இதன் வேகத்தின் ரகசியம் அதன் மூக்கில்தான் உள்ளது. அதன் மூக்கின் உள்ளே உள்ள சிறிய எலும்பு அமைப்புகள், காற்றோட்டத்தைச் சீராக்கி, அதிவேகமாகப் பறக்கும்போதும் பறவையால் எளிதாக சுவாசிக்க உதவுகின்றன. இதன் கண் பார்வையும் சூப்பர் பவர். ஒரு மைல் தூரத்தில் உள்ள இரையைக்கூட அதனால் எளிதாகப் பார்க்க முடியும். இதனால், இரையை திடுக்கிடச் செய்து தாக்குவதற்கு இது மிகவும் உதவுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அண்டார்டிகா தவிர, உலகின் அனைத்து கண்டங்களிலும் பெரக்ரின் ஃபால்கன்களைக் காணலாம். பாறைகள், காடுகள், கடற்கரை பகுதிகள் அல்லது நகரங்களில் உள்ள உயரமான கட்டிடங்கள் என எல்லா இடங்களிலும் வாழக்கூடிய தகவமைப்பை இது பெற்றுள்ளது. நகரங்களில், உயரமான கட்டிடங்கள் மற்றும் பாலங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. இவை 36 முதல் 49 செ.மீ நீளம் வரையிலும், இறக்கைகள் 115 செ.மீ வரை வளரும். அதன் தனித்துவமான தோற்றம், சாம்பல்-நீல முதுகு, கருப்புக் கோடுகளுடன் கூடிய வெள்ளை வயிறு மற்றும் மீசை போன்ற கருப்புப் பட்டை ஆகியவை எளிதில் அடையாளம் காண உதவுகின்றன.
பெரக்ரின் ஃபால்கன் வேட்டையாடும் பறவை. அதன் உணவில் சுமார் 300 வகையான பறவை இனங்கள் உள்ளன. புறாக்கள், வாத்துகள் அல்லது சிறிய பறவைகளை வேட்டையாடுகிறது. தனது கூர்மையான நகங்களால், ஒரு நொடியில் இரையைத் தாக்கி பிடித்துவிடும். 20-ம் நூற்றாண்டின் மத்தியில், டி.டி.டி போன்ற பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பெரக்ரின் ஃபால்கன் எண்ணிக்கையைக் குறைத்தது. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள், ரசாயனத் தடை மற்றும் இனப்பெருக்கத் திட்டங்கள் ஆகியவற்றால் அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் இப்போது 1,700க்கும் மேற்பட்ட இனப்பெருக்க ஜோடிகள் உள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் போன்ற நகரங்களில் பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. இது நவீன வரலாற்றின் மிக வெற்றிகரமான பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாகும்.