சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச வைஃபை வசதி நேற்று (நவ 15) முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதைத், தொடர்ந்து 41நாள்கள் வழிபாடுகள் நடத்தப்படும். இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை தருவார்கள்.
சபரிமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் தொலைத் தொடர்பு சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனால் குழுவில் தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொள்வது, அவசர கால தொடர்புகள் போன்றவற்றில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இதனால், சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் சார்பில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மண்டல கால வழிபாடுகள் தொடங்கி உள்ளதால் திருவனந்தபுரம் தேவசம்போர்டுடன் பி.எஸ்.என்.எல் இணைந்து இந்த வசதியை தொடங்கி உள்ளது. அதன்படி ஒரு சிம் கார்டுக்கு அரை மணி நேரம் இந்த வசதியை பெறலாம். தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், பி.எஸ்.என்.எல் துணை பொது மேலாளர் கே.ஜோதிஷ்குமார், இணை இயக்குநர் அபிலாஷ் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். இதற்காக, நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 48 இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் சபரிமலை அலுவலகப் பொறுப்பாளர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்தார். மற்றொரு புறம், சபரிமலை வழித்தடத்தில் பி.எஸ்.என்.எல் சார்பில் புதியதாக 4ஜி டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.என்.எல்-லின் வைஃபை சேவையைப் பெற முதலில் போனில் உள்ள வைஃபை ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின்பு, திரையில் காட்டப்படும் பி.எஸ்.என்.எல் வைஃபை அல்லது பி.எஸ்.என்.எல் பிஎம்வாணி எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து திறக்கப்படும் வலைப்பக்கத்தில், பத்து இலக்க மொபைல் எண்ணைத் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைபேசிக்கு 6 இலக்க எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். இதனை உள்ளீடு செய்ததும் வைஃபை சேவையைப் பெறலாம்.
இதற்காக சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் 300 எம்.பி.பி.எஸ் அப்லிங்க் வேகத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“