நான்-ஸ்டிக், ஏர்-ஃப்ரையர் சமையல் முறைகள் அதிகரித்துவரும் நிலையில், அதன் ஆபத்துகளை உணர்ந்து, மீண்டும் பாரம்பரிய மண்பாண்ட சமையல் முறைக்கு பலர் திரும்பி வருகின்றனர். மண்பாண்டங்களின் ஆரோக்கியம் மற்றும் இயற்கையான சுவையின் காரணமாக, தற்போது மண்பானை, மண்கடாய், மண் தோசைக்கடலை எனப் பல வகையான மண்பாண்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன.
மண்பானை சமையலின் நன்மைகள்:
மண்பாண்டங்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் அதன் மதிப்பை குறைவாக எடைபோடுகிறோம். ஆனால், சமைத்து உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். மண்பாண்டங்கள் அதிக நேரம் வெப்பத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்டவை. குறைந்த தீயில் மெதுவாகச் சமைப்பதற்கு இவை மிகவும் ஏற்றவை. மண்பாண்டங்களில் சமைக்கும்போது, இயற்கையாகவே ஒருவித மண் வாசனை உணவில் சேர்ந்து கூடுதல் சுவை அளிக்கும். உணவில் உள்ள அமிலத்தன்மை, காரத்தன்மையை சமன் செய்து, உணவின் PH அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.
உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதையாமல் முழுமையாகக் கிடைக்கின்றன. மண்பாண்ட சமையலுக்குக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதும். உணவு அனைத்துப் பக்கங்களிலும் ஒரே சீராக வேகும். சமைத்த பிறகும் நீண்ட நேரம் உணவைச் சூடாகவே வைத்திருக்கும். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள ரசாயனங்கள் சுற்றுச் சூழலைப் பாதிக்கலாம். ஆனால் மண்பாண்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை.
மண்பாண்டங்களை சீசனிங் செய்வது எப்படி?
கடைகளில் வாங்கும் சில மண்பாண்டங்கள் ஏற்கனவே சீசனிங் செய்யப்பட்டிருக்கும். ஆனால் சாலையோரக் கடைகளில் வாங்குபவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு சீசனிங் செய்வது அவசியம். அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம். முதலில், வாங்கிய மண்பாண்டங்களை எந்த சோப்பும் பயன்படுத்தாமல், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் முழுவதுமாக மூழ்க வைக்க வேண்டும். குறைந்தது 8 முதல் 14 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற விடவும். இவ்வாறு செய்வதால், மண் தண்ணீரை நன்கு உறிஞ்சி, சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாகும்.
இரவு முழுவதும் ஊறிய பானையை வெளியே எடுத்து, நல்ல தண்ணீரில் ஒருமுறை கழுவவும். பிறகு, அதை நிழலில் மட்டுமே காய வைக்க வேண்டும். வெயிலில் வைத்தால் பானையில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஈரம் முழுவதுமாக நீங்கும் வரை நன்கு காய விடவும். நன்கு காய்ந்த பிறகு, பானை முழுவதும் அரிசி ஊறவைத்து கழுவிய நீரை ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் காலையில் அதை சுத்தமான நீரில் நன்கு கழுவி, மீண்டும் 2 மணி நேரம் நிழலில் உலர விடவும். 2 நாட்கள் சீசனிங் செய்த பிறகு, ஒரு சுத்தமான துணியில் சிறிதளவு சமையல் எண்ணெய் எடுத்து, பானையின் உட்புறம் முழுவதும் தடவ வேண்டும். இந்த எண்ணெய் உலர, ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். இப்போது உங்கள் மண்பானை சமையலுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் பாரம்பரிய முறையைப் பின்பற்றி, ஆரோக்கியமான சமையல் அனுபவத்தைப் பெறலாம்.