/indian-express-tamil/media/media_files/2025/09/22/vanjaram-fish-2025-09-22-19-40-17.jpg)
மூளை, இதயத்தை வலுவாக்கும் வல்லமை... இந்த மீன் ரொம்ப பெஸ்ட்: டாக்டர் மைதிலி
வஞ்சிரம் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து டாக்டர் மைத்திலி, ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு நிபுணர், தனது யூடியூப் சேனலில் (Dr. Mythili - Ayurveda Doctor & Dietitian) விரிவாக எடுத்துரைத்துள்ளார். வஞ்சிரம் மீன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் காக்கும் ஆற்றல் கொண்டது என்று டாக்டர் மைதிலி தெரிவித்துள்ளார்.
மூளை மற்றும் இதய ஆரோக்கியம்: வஞ்சிரம் மீனில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். மூளைக்கு ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இது வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் உதவுகிறது. இதயத் தசைகளை வலுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தைப் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன என்கிறார் டாக்டர் மைதிலி.
சருமப் பாதுகாப்பு: வைட்டமின் E சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுடன் இணைந்து சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதனால் சரும வறட்சி குறைந்து, பொலிவுடன் இருக்கும் என்கிறார் டாக்டர் மைதிலி.
கண் பார்வை மேம்பாடு: வைட்டமின் ஏ சத்து, கண் பார்வையை கூர்மையாக்கி, மாலைக்கண் நோய், கிளௌகோமா (glaucoma), கேட்டராக்ட் (cataract) போன்ற கண் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: செலினியம் மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துக்கள் வஞ்சிரம் மீனில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தைராய்டு மற்றும் மன அழுத்த நிவாரணம்: ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் வஞ்சிரம் மீனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை இயற்கையாகவே குறைக்க இது உதவுகிறது.
தசை மற்றும் எலும்பு வளர்ச்சி: அதிகளவில் உள்ள புரதச்சத்து, வளரும் குழந்தைகளின் தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. மேலும், இது நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும், சகிப்புத்தன்மையையும் வழங்குகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியைப் பராமரித்து, எலும்புகளை வலுவாக்குகின்றன. ஆர்த்ரைடிஸ் (arthritis) மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) போன்ற எலும்பு வியாதிகள் வரும் வாய்ப்பையும் குறைக்கின்றன என்கிறார் டாக்டர் மைதிலி.
வஞ்சிரம் மீனில் மெர்குரி (பாதரசம்) அளவு அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், 10 நாட்களுக்கு ஒருமுறை என அளவோடு உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மைத்திலி அறிவுறுத்தியுள்ளார். மற்றவர்கள் வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us