/indian-express-tamil/media/media_files/2025/05/13/L65KIMJrnnDywl7vqLZD.jpg)
ஸ்ரீரங்கம் காவிரி ஆறு அம்மா மண்டப படித்துறையில் கஜேந்திர மோட்சம் வைபவம்!
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரிஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் கோயில் யானை ஆண்டாளின் காலை, முதலை இழுப்பது போன்றும், யானையை நம்பெருமாள் காப்பாற்றி மோட்சம் அளிப்பது போன்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் அம்மா மண்டப படித்துறையில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளினார். இதற்காக நம்பெருமாள் வழிநடை உபயமாக அம்மா மண்டம் சென்றார். முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான். இதனால், துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமான முனிவர் கந்தர்வனை முதலையாக சாபமிட்டார். உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது விஷ்ணுவின் சக்ர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
இதேபோல் இந்திரேதாயும்நா என்ற மன்னன் பெருமாளை வழிபடும்போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக சபித்தார். இதனால், அவர் கஜேந்திர யானையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு, பூஜைக்காக தாமரைபூ பறிக்க போனபோது தடாகத்திலிருந்த முதலை கஜேந்திர யானையின் காலை கவ்விக்கொண்டு விட மறுத்தது. எவ்வளவோ முயன்றும் அந்த முதலை யானையின் காலை விடவில்லை. இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரங்கா, ரங்கா என்று கூவி தன்னை காப்பாற்ற அழைத்தது.
உடனே கருடன் மீது ஏறி அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான கஜேந்திரனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் ஆகும். இந்நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும். இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7.15 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
பின்னர் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றிற்கு சென்றார். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டி, போக்கு கட்டியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னா், இரவு 8.15 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவையொட்டி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.