பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர உள்ளார். வரும் 27ம் தேதி ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பங்கேற்க இருக்கிறார்.
இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள்கள் ஷெகாவத் (கலாச்சாரம்), எல்.முருகன் (செய்தி ஒலிபரப்பு) ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழ புரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இது, முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப் பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் சிறப்பை கண்டுகளிக்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் சிறப்பை உணர்ந்து ஐக்கியநாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக புராதன பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆடி மாத திருவாதிரை விழாவானது, தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் வெகு விமரிசையாகவும், சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27 ஆம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.