/indian-express-tamil/media/media_files/2025/05/24/5CrEw4GQQRfueMHLhPtC.jpg)
How to grow lemon plant at home
மாடித்தோட்டம் அமைப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், சில சமயங்களில் செடிகள் பூக்காமலும் காய்க்காமலும் போவது ஏமாற்றமளிக்கும்.
அந்தவகையில் எலுமிச்சை செடி வைத்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் பூக்கள் வராதது அல்லது பூக்கள் உதிர்ந்து போவது போன்ற பிரச்சனைகள் பலரை கவலையடையச் செய்கின்றன. உங்களுக்கும் இதே நிலை என்றால், இனி கவலைப்படத் தேவையில்லை.
எலுமிச்சை செடி ஒரு சென்சிடிவ் வகை என்பதால், நாம் கவனக்குறைவாக இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
1. செடியில் காய்ந்த குச்சிகள் இருந்தால், அவற்றை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். இவை பூச்சித் தாக்குதலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2. எலுமிச்சை செடிக்கு முழு நேர சூரிய ஒளி மிகவும் அவசியம். போதுமான சூரிய ஒளி இல்லையென்றால், பூக்கள் உருவாகாது.
3. எலுமிச்சை செடிக்கு அதிகப்படியான தண்ணீர் ஊற்றக்கூடாது. மேல் மண் காய்ந்திருக்கிறதா என்று சோதித்த பின்னரே தண்ணீர் விட வேண்டும்.
4. எலுமிச்சை செடிக்கு மென்மையான கவாத்து செய்வது அவசியம். நுனியை லேசாக வெட்டி விடும்போது புதிய கிளைகள் வளரும். புதிய கிளைகள் வளரும்போது நிறைய புதிய பூக்கள் உருவாகும்.
இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால், உங்கள் செடியின் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் வேகமாகவும் இருக்கும். உரம் கொடுப்பதற்கு முன், எலுமிச்சை செடியின் மண்ணை லேசாக கிளறி விடுவது நல்லது.
அதிசக்தி வாய்ந்த படிகாரக் கல் உரம்
எல்லா உரங்களையும் முயற்சி செய்தும் பூக்கள் வரவில்லையா அல்லது பூக்கள் வந்தும் கொட்டிப் போகிறதா? அப்படியானால், படிகாரக் கல் உரத்தை முயற்சி செய்து பாருங்கள். படிகாரக் கல்லில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், எலுமிச்சை செடியில் நிறைய பூக்கள் பூக்க இது உதவியாக இருக்கும். இந்த உரத்தை நாம் இரண்டு விதமாகப் பயன்படுத்தலாம். உரம் கொடுக்கும் முன், மண் காய்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
• தூள் வடிவம்
மண் லேசாக ஈரமாக இருக்கும்போது, ஒரு சிறிய துண்டு படிகாரக் கல்லை எடுத்து நன்கு பொடி செய்து கொள்ளுங்கள். இந்த படிகாரக் கல், மண்ணில் உள்ள பூச்சித் தாக்குதல் அல்லது வேர்களில் உள்ள பூஞ்சையைக் கட்டுப்படுத்தவும் உதவும். தொட்டியின் ஓரங்களில் சுற்றிலும் தூவி விட்டு, மண் ஈரப்பதமாக இருப்பதால் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றவும்.
முக்கிய குறிப்பு: இதை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு செடிக்கு ஒரு பின்ச் அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.
• கரைசல் வடிவம்
ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிறிய படிகாரக் கல்லை நான்கு முதல் ஐந்து வினாடிகள் மட்டும் போட்டு உடனடியாக வெளியே எடுத்து விடவும். அதாவது, மண்ணைக் கிளறி விடும் நேரம் மட்டுமே படிகாரக் கல் தண்ணீரில் இருக்க வேண்டும். இந்த ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு செடிக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் உரங்கள் பயன்படுத்தும் போதும் அளவு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு செடிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் போதுமானது.
எப்போது தண்ணீர் விட வேண்டும்?
படிகாரக் கல் உரத்தை இட்ட பிறகு, மேல் மண் காய்ந்திருக்கும்போது மட்டுமே அடுத்த முறை தண்ணீர் விட வேண்டும். இந்த இரண்டாவது முறையை மண் காய்ந்திருக்கும்போது முயற்சி செய்யுங்கள்.
இந்த பராமரிப்பு குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றி, இந்த படிகாரக் கல் உரத்தையும் கொடுக்கும்போது, உங்கள் செடியில் மிகச் சிறந்த மாற்றத்தைக் காண்பீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.