ஒரு முறை இந்த பூண்டு சட்னி செய்தால் போதும், நாம் 1 வாரம்வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
வர மிளகாய் – 15
நாட்டு பூண்டு – 30 பல்
பெரிய தக்காளி – 3
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
கல் உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்,
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை: மிளகாய் பூண்டு சட்னி செய்ய முதலில் பூண்டு பற்களை ஒவ்வொன்றாக எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டுக் காயவிடுங்கள். பின்னர் இதில் காம்பு நீக்கிய வர மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். வதக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து வதக்குங்கள்.
ரெண்டு நிமிடம் நன்கு வதக்கிய, மிளகாய் நல்ல வாசமாக உப்பி வரும். செக்க செவேலென சிவந்து வரும் பொழுது நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசம் போக வதங்கி வரும் பொழுது, அதன் நிறம் மாற ஆரம்பிக்கும்.
இப்போது பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்க உப்பு சேர்க்க வேண்டும். இந்த சட்னிக்கு கல் உப்பு சேர்ப்பது நல்லது. அதனுடன் புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தக்காளி நன்றாக மசிய வதங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.
ஆறிய இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, கட்டியாக சட்னி பதத்தில் அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.இந்த சட்னியை இப்போது தாளிக்க வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு தாளிப்பு கரண்டியை அதில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து நன்கு காய விடுங்கள்.
நல்லெண்ணெய் நன்றாக காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து வறுபட்டவுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை தாளித்து சட்னியில் கொட்டி இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் டேஸ்டியான பூண்டு சட்னி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“