தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவம் இன்று பல நோய்களுக்கு தீர்வைக் கொண்டுள்ளது. பல நோய்களை வருமுன் தடுக்கும் மருத்துவத்தைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவம் மருந்து என்று எதையும் தனியே பிரித்து வைப்பதில்லை. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உணவுப் பொருட்களையே மருந்தாக உட்கொள்ளும் முறையைக் கொண்டுள்ளது. அதனால்தான், தமிழ் மருத்துவம் உணவே மருந்து என்று கூறுகிறது.
இன்றைக்கு மனிதர்கள் எதிர்கொள்ளும் பல உடல்நலப் பிரச்னைகளுக்கு உணவுமுறை மாற்றமும் வாழ்க்கைமுறை மாற்றமும் ஒரு காரணம். பலரும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்வதால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தும், உடல் எடை அதிகரித்தும் விடுவதால் உடலில் கொழுப்பைக் குறைக்க ஓடிக்கொண்டிருக்கின்றனர். அதோடு, உணவு முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில், பூண்டு பாலின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பூண்டு ஒரு பல் பார்க்க ரொம்ப சின்னதாக தெரியலாம். ஆனால், அதில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதிலும், பூண்டு பால் செய்து பருகினால், அவ்வளவு நன்மை இருக்கிறது.
பூண்டு பால் செய்வது எப்படி?
செய்முறை:-
முதலில் 4-5 பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அதனுடன் பூண்டு சேர்த்து பாதியாக சுண்டும் வரை கொதிக்க வையுங்கள். பால் பாதியாக சுண்டிய உடன் இறக்கி வைத்து பாலுடன் பூண்டையும் சாப்பிட வேண்டும்.
இப்படி தினமும் பூண்டு பாலை காய்ச்சி சாப்பிட்டுவர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் குறையும்.
ஒரு சின்ன பூண்டுதான், ஆனால் எவ்வளவு நன்மைகள்?
பூண்டு காரத்தன்மை கொண்டது. பூண்டில் அல்லிசினில் முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்களை வலிமையாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தம் உறைதல் எதிர்ப்பு குணங்கள் இருப்பதால் உடலில் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. அதனால், அறுவை சிகிச்சைக்குப் பின், உடனடியாக பூண்டு சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஏனென்றால், ரத்தக் கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம். அதனால்தான், பிரசவம் ஆன பெண்களுக்கு உடனடியாக உணவில் பூண்டு கலக்க மாட்டார்கள். ஆனால், பிரசவம் ஆன தாய்மார்களுக்கு, சில நாட்களில், பால் சுரப்பதற்கு உணவில் அளவாக பூண்டு சேர்ப்பார்கள். பூண்டு பால் சுரப்பதற்கு நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.