வாயு வெளியேறுவது என்பது நம் உடலில் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு, எனினும் இது கெட்ட வாடையுடன் வெளியேறி சங்கடத்தை ஏற்படுத்தும் போது, நம்மில் பலருக்கும் தொந்தரவாக இருக்கிறது.
இது குறித்து அரசு பொது மருத்துவர் அ.ஃபரூக் அப்துல்லா கூறுவதை பார்ப்போம்...
நமது ஜீரண மண்டலத்தில் காற்று எப்படி செல்கிறது?
காற்று, வாய் வழியாக உடலுக்குள் செல்கிறது. உணவை வேகமாக விழுங்கும் போதும், பபுள் கம் போன்றவற்றை அதிகமாக மெல்லும் போதும், முறையாக மாட்டப்படாத பல் செட்டுகளாலும் கூட காற்றை நாம் விழுங்குவது அதிகமாகிறது. இவ்வாறு நாம் விழுங்கும் காற்றில் நைட்ரஜன் அதிகமாக இருக்கும்.
மற்றொரு வகையில் காற்று ஜீரண மண்டலத்திற்குள் செல்வது…
நாம் சாப்பிட்ட உணவுகள், குடலில் உள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களால் அரைகுறையாக செரிமானத்திற்கு உள்ளாகும் போது வாயு உருவாகிறது. இதில் ஹைட்ரஜன், கார்பன்டைக்சைடு மற்றும் மீத்தேன் போன்றவை கலந்திருக்கும். இதனால் வெளியேறும் வாயுவில் கெட்ட வாடை அடிக்கிறது.
நாம் உண்ணும் மாவுச்சத்து பொருட்களை, நமது ஜீரண மண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அரைகுறையாக நொதிக்க வைக்க, அப்படி அரைகுறையாக செரிமானம் ஆன பொருட்கள், பெருங்குடல் பகுதிக்கு செல்லும் போது அதில் இருந்து வெளியேறும் இந்த வாயு ஆசனவாய் வழி வெளியேறுகிறது.
இத்தகைய உணவுகளை "ஃபாட்மேப்" (FODMAP) உணவுகள் என்று அழைக்கிறோம்.
ஃபாட்மேப் உணவுகள்
பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ், பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ் , ஃப்ரக்டோஸ் நிரம்பிய சோளச் சாறுகள், உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பு சுவை கூட்டிகள், பயறு வகைகள் , பீன்ஸ், பருப்பு வகைகள், காளிபிளவர், முட்டை கோஸ், ப்ராக்கோலி, பூண்டு, வெங்காயம், கோதுமை, மைதா , அரிசி உள்ளிட்ட முழு தானியங்கள் போன்றவை இந்த ஃபாட்மேப் வகைக்குள் வரும்.
காற்று பிரியும் போது கெட்ட வாடை வருவதற்கு காரணமாக இருப்பது பூண்டு, வெங்காயம், கத்திரிக்காய், காளான், உணவில் சேர்க்கப்படும் மசாலா சேர்மானங்கள்.
/indian-express-tamil/media/media_files/WVgT19ZfgNQNWiRIiD5s.jpg)
நிவாரணம்
யாரெல்லாம் அதிகமாக வாயு பிரிவது, வாயு கெட்ட வாடையாக உள்ளது போன்ற பிரச்சனைகளுடன் இருக்கிறார்களோ அவர்கள் உணவை மெதுவாக நிறுத்தி நிதானமாக சாப்பிடவேண்டும். பபுள் கம், சுயிங் கம் போட்டு மெல்லுவதை தவிர்க்க வேண்டும், பற்களுக்கு சரியாக சேரும் பல் செட் கட்டிக்கொள்ள வேண்டும்.
சிலர் தங்களுக்கு இருக்கும் மனபதட்டத்தின் விளைவாக காற்றை விழுங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பதட்டத்தைக் குறைத்தால் காற்றை விழுங்குவது குறையும்.
மேற்சொன்ன நடவடிக்கைகள் மூலம் காற்று விழுங்கப்படுவது குறையும்.
லாக்டோஸை நமது ஜீரண மண்டலம் சகிக்க இயலாத நிலை இருப்பின் லாக்டோஸ் அடங்கிய அனைத்து பால் பொருட்களையும் 2 வாரங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்.
முன்னேற்றம் தெரிந்தால் லாக்டோஸை ஜீரண மண்டலம் சகிக்க இயலாததால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை கருத்தில் கொண்டு லாக்டோஸ் குறைவான உணவுகளான சீஸ், வெண்ணெய், பாலாடை , யோக்ஹர்ட் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கையில் நிவாரணம் கிடைக்காவிடில் தங்களுக்கு லாக்டோஸ் இண்டாலரன்ஸ் பிரச்சனை இல்லை என்று கருத்தில் கொண்டு அடுத்து ஃபாட்மேப் உணவுகள் அனைத்தையும் 2 முதல் 4 வாரங்கள் நிறுத்தி விட வேண்டும்.நோய் நிலையில் முன்னேற்றம் கண்டால் ஃபாட்மேப் குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு உணவாக சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது எந்த உணவுப் பொருள் வாயுப் பிரச்சனையை அதிகரிக்கிறது என்பது தெரியும். அந்த உணவு பொருளை இனிவரும் நாட்களில் தவிர்த்து விட வேண்டும்
நமது உணவில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிர் , யோஹர்ட் , கெஃபிர் போன்றவற்றை உட்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரையில் ப்ரோபயாடிக் மாத்திரைகள் உட்கொள்ளவதால் சிறிது பலன் கிடைக்கும.
பயறு, பருப்பு , பட்டானி போன்றவை உண்ணும் போது மட்டும் வாயுத் தொல்லை ஏற்படுமாயின் அதற்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் செரிமானம் செய்யும் நொதி மாத்திரையை உட்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: என்.எம். இக்பால், கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“