/indian-express-tamil/media/media_files/2025/08/14/urinary-kidney-freepik-2025-08-14-08-27-55.jpg)
இரைப்பைக் குடலியல் நிபுணர் (Gastroenterologist) டாக்டர் சௌரப் சேத்தி மூல நோயை சமாளிக்க 3 முக்கிய தீர்வுகளைப் பரிந்துரைத்துள்ளார். Photograph: (Freepik)
மலச்சிக்கல் அல்லது கர்ப்ப காலத்தில் சிரமப்படுவது போன்ற காரணங்களால் ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள ரத்த நாளங்கள் வீக்கமடைவதை தான் மூல நோய் (Piles) என்று அழைக்கிறோம். இது பொதுவாக ஏற்படும் ஒரு மருத்துவ நிலை. ஆனால், பலரும் இதை வெளியில் சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூல நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்:
மூல நோய்க்கான 3 முக்கிய தீர்வுகள்
இரைப்பைக் குடலியல் நிபுணர் (Gastroenterologist) டாக்டர் சௌரப் சேத்தி மூல நோயை சமாளிக்க 3 முக்கிய தீர்வுகளைப் பரிந்துரைத்துள்ளார்.
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள்:
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கும். இது மலக்குடலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
இந்தக் க்ரீம்களைப் பயன்படுத்துங்கள்:
ஹைட்ரோகார்டிசோன் அல்லது விச் ஹேசல் (witch hazel) கலந்த க்ரீம்களைப் பயன்படுத்தும்போது அரிப்பு மற்றும் வீக்கம் குறைகிறது.
அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறையுங்கள்:
நீங்கள் ஒருவேளை நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால், அவ்வப்போது எழுந்து நடமாட முயற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஆசனவாயில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி, மூல நோயை மோசமாக்கிவிடும்.
மூல நோய்க்கு ஒரு முழுமையான வழிகாட்டி
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவர் மணீஷ் டோட்மணி, ஆலோசகர், மருத்துவ இரைப்பைக் குடலியல் துறை, கிம்ஸ் மருத்துவமனை, தானே ஆகியோரின் ஆலோசனையின் படி கொடுக்கப்பட்டுள்ளது.
மூல நோய் என்றால் என்ன?
மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள ரத்த நாளங்கள் வீங்குவதாகும். மலச்சிக்கல், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, கர்ப்பம் அல்லது அதிக எடை தூக்குதல் போன்ற காரணங்களால் இந்த வீக்கம் ஏற்படுகிறது.
மூல நோயில் இரண்டு வகைகள் உள்ளன:
உள்மூல நோய் (Internal hemorrhoids): மலக்குடலின் உள்ளே ஏற்படுகிறது.
வெளிமூல நோய் (External hemorrhoids): ஆசனவாயைச் சுற்றி ஏற்படுகிறது.
இந்த நோயின் அறிகுறிகளாக அரிப்பு, மலம் கழிக்கும்போது ஏற்படும் சிரமம், ரத்தப்போக்கு அல்லது ஆசனவாயில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை இருக்கலாம்.
மேற்கூறிய குறிப்புகள் மூல நோய்க்கு உதவுமா?
ஆம், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் மூல நோய்க்கு முதல் சிகிச்சையாகக் கருதப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் இருப்பது போன்ற பழக்கங்கள் மூல நோயின் ஆரம்ப நிலையிலும், மிதமான பாதிப்புகளின்போதும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
மூல நோய் ஏற்படும்போது என்ன கவனத்தில் கொள்ள வேண்டும்?
சுய-சிகிச்சையைத் தவிர்க்கவும்: மலம் கழிக்கும்போது இரத்தம் வந்தால், அது மூல நோயாக மட்டுமில்லாமல் வேறு சில தீவிர நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகையால் சுய-சிகிச்சையைத் தவிர்த்து மருத்துவரை அணுகுவது நல்லது.
நோயை மோசமாக்குவதைத் தவிர்க்கவும்: மலம் கழிக்கும்போது அழுத்தி துடைப்பது, அதிகப்படியான மலமிளக்கியைப் பயன்படுத்துவது அல்லது மலம் கழிக்கும் உணர்வைத் தவிர்ப்பது போன்றவற்றைக் குறைக்க வேண்டும்.
அறிகுறிகள் குறையவில்லை என்றால் என்ன செய்வது?
மேற்கூறிய குறிப்புகளைப் பின்பற்றியும் மூல நோயின் அறிகுறிகள் குறையவில்லை என்றால், நீங்கள் ஒரு இரைப்பைக் குடலியல் நிபுணரை (gastroenterologist) அணுகுவது நல்லது. சில நேரங்களில், ரப்பர் பேண்ட் லிகேஷன் (rubber band ligation) அல்லது அகச்சிவப்பு உறைதல் (infrared coagulation) போன்ற குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சைகள் (minimally invasive treatments) தேவைப்படலாம். மேலும், முற்றிய நிலைகளில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.
குறிப்பு: மூல நோய் ஆபத்தானது இல்லை என்றாலும், அது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும். நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவது எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான தகவல்களின் அடிப்படையிலும், நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு புதிய பழக்கத்தையும் தொடங்குவதற்கு முன்பு, எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.