good friday 2019 : புனித வெள்ளி, கிறிஸ்துவர்கள் கொண்டாடும் விழாக்களில் இதும் ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்து கி.பி.33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் என்பது சான்றோர்களின் கருத்து.
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், பின்புள்ள காலம் புதிய ஏற்பாட்டு காலம் என்றும் பிரித்துள்ளனர்.
முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் படி இயேசு எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அந்த வகையில் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், 'இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.
Good Friday 2019 - History, Significance: புனித வெள்ளி வரலாறு!
இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய்களை தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சினர். எனவே, அவர் மதவிரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினர்.
இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றி விடுதலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பிலோத்து. எனினும் மக்கள் விடுவதாயில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையயுமாறு கூறினார்கள். மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் கலவரம் வெடிக்கும் என்று பயந்த பிலோத்து மக்கள் கூறியபடியே செய்ய முன்வந்தார். எனினும், இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார். இயேசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் கதறி அழுதனர்.
கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மக்களுக்காக இயேசு உயிர் நீத்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட 3 ஆவது நாள் உயிர்தெழுந்தார் என்றும் பைபிள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இயேசு உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகின்றனர் கிறிஸ்துவர்கள்.