/indian-express-tamil/media/media_files/2025/07/25/good-sleep-tips-2025-07-25-18-20-46.jpg)
தலையணைக்கு அடியில் இந்த இலையை வைங்க… படுத்த உடன் தூக்கம் வரும்; டாக்டர் ஜெயரூபா
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று. நாம் வாழ்க்கையின் 3-ல் ஒரு பங்கை தூக்கத்திலேயே கழிக்கிறோம். தூக்கத்தின் போதுதான் நம் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது மற்றும் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தையும், அதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் டாக்டர் ஜெயரூபா தெளிவாக விளக்கி உள்ளார்.
ஏன் தூக்கம் முக்கியம்?
தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல. இது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கான நேரம். தூங்கும்போது, நமது செல்கள் புதுப்பிக்கப்பட்டு, உடல் இளமையாக இருக்க உதவுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாவதையும், பெருகுவதையும் தடுப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. தூக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் மெலடோனின் ஹார்மோன், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணர வைத்து, சருமத்தைப் பளபளப்பாக்கி, நோய்களைத் தடுக்க உதவுகிறது.
பலரும் பல்வேறு வகையான தூக்கப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். டாக்டர். ஜெயரூபா 4 பொதுவான தூக்கக் கோளாறுகளை சுட்டிக்காட்டி, அவற்றுக்கான காரணங்களையும் விளக்கி உள்ளார். தூங்குவதில் சிரமம், பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் அதிக சிந்தனையுடன் தொடர்புடையது. மனம் அமைதியற்று இருக்கும்போது தூக்கம் வருவது கடினம். நள்ளிரவில் விழிப்பது, இது ஹார்மோன் சமநிலையின்மை அல்லது ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படலாம். சர்க்கரை அளவு குறையும்போது, உடல் எதிர்வினையாற்றி உங்களை எழுப்பக்கூடும். அதிகாலையில் விழிப்பது, காலையில் செய்ய வேண்டிய வேலைகள், பணிகள் குறித்த கவலை அல்லது பதற்றம் காரணமாக இது நிகழலாம். போதுமான தூக்கத்திற்குப் பிறகும் சோர்வாக உணர்வது, ஆழமற்ற தூக்கம், நாசி பாலிப்ஸ், சைனசிடிஸ், ஆஸ்துமா, தைராய்டு பிரச்னைகள் அல்லது வைட்டமின் டி குறைபாடு போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்னைகளை குறிக்கலாம்.
நிம்மதியான தூக்கத்திற்கான எளிய தீர்வுகள்
இரவு 7-8 மணியளவில் கசகசா மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பாலுடன் கலந்து குடிக்கலாம். இது உடலுக்கு அமைதியை அளித்து, தூக்கத்தைத் தூண்டும். பாதங்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வது நரம்புகளைத் தணித்து, தளர்வைத் தரும். நள்ளிரவில் விழிப்பவர்களுக்கு, ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த, வாழைப்பழம் அல்லது கொய்யா போன்ற பழங்கள் (அ) சில பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடலாம். சர்க்கரை குறைபாட்டால் ஏற்படும் விழிப்புணர்வைத் தடுக்கும். அதிகாலையில் விழிப்பவர்களுக்கு, பதற்றத்தை குறைக்க, சுமார் 10 முறை ஆழமான சுவாசப் பயிற்சிகளை (ஆழமாக உள்ளிழுத்து விரைவாக வெளியேற்றுவது) செய்யலாம். இது மனதை அமைதிப்படுத்தும். தூக்கத்திற்குப் பிறகும் சோர்வாக உணர்வர்களுக்கு, உடலின் சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த, மாலையில் லேசான உடற்பயிற்சி அல்லது சூரிய ஒளியில் நடப்பது நல்லது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மாலையில் புதினா தேநீர் அல்லது துளசி தேநீர் குடிக்கலாம்.
உங்கள் தலையணையின் கீழ் மருதாணி பூக்கள் அல்லது துளசி இலைகளை வைக்கலாம். அவற்றின் நறுமணம் அமைதியைத் தரும். படுக்கைக்கு செல்லும் முன், அமைதியான மனதுடன், இனிமையான இசை அல்லது கதைகளைக் கேட்டு தூங்குவதற்குத் தயாராகுங்கள். மொபைல் போன் மற்றும் திரைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம் என்கிறார் டாக்டர் ஜெயரூபா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.