சர்வதேச நிறுவனங்களை பொருத்தவரையில் தமிழர்களின் பெருமைகள் மற்றும் பங்களிப்பு நீண்டுக் கொண்டே செல்வதில் மாற்றுக் கருத்து இல்லை. பெப்சிகோ நிறுவனக்த்தில் தொடங்கி கூகுள் நிறுவனம் வரை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பணி நியமிக்கப்படுவது அனைவரும் பெருமைக்கொள்ளும் தருணமாக இருந்து வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபாகர் ராகவன் தற்போது இணைந்துள்ளார். கூகுள் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபாகர் ராகவன் சென்னையில் பிறந்தவர் என்பது கூடுதல் தகவல்.
சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த அவர், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு யாகூ லேப்ஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, விளம்பர வர்த்தக பிரிவுக்கு பிரபாகர் ராகவனை விட, சரியான தேர்வு வேறேதுமில்லை என்று கூறியுள்ளார்.