கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சென்னையில் உள்ள பூர்வீக வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான சி.மணிகண்டன் அந்த இடத்தை வாங்கியுள்ளார்.
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பு வகிக்கும் சுந்தர் பிச்சைக்கு சென்னை அசோக் நகர் பகுதியில் சொந்தமாக பூர்விக வீடு இருந்தது. சுந்தர் பிச்சை பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாம் இங்குதான்.
பின்னர், கரக்பூர் ஐஐடி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்த சுந்தர், 2004-ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்து, தற்போது கூகுள் நிறுவன சிஇஓ.வாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பூர்வீக வீட்டை, சுந்தர் பிச்சையின் தந்தை தற்போது விற்பனை செய்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் அந்த இடத்தை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என தெரிந்ததும், அதனை வாங்க முடிவு செய்தேன். சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து இது என்பதால் அவர் பெயரில் தான் இந்த வீடு இருந்தது. அவர் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வீட்டை வாங்குவதற்கான பணிகளை முடிக்க 4 மாதங்கள் ஆனது.
சுந்தர் பிச்சையின் தந்தை சென்னை வந்தவுடன், அவரை நான் பார்த்தபோது உடனடியாக வீட்டு ஆவணங்களை என்னிடம் ஒப்படைத்தார். சுந்தரின் தாய் எனக்கு சுவையான காபி போட்டுக் கொடுத்தார். இது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனைத்து வரிகளையும் செலுத்த சுந்தர் பிச்சையின் தந்தை நீண்ட நேரம் காத்திருந்தார். எல்லா பணிகளையும் சிறப்பாக செய்த முடித்த பிறகே ஆவணங்களை முறைப்படி என்னிடம் வழங்கினார்.
இது அவரது முதல் சொத்து என்பதால் ஆவணங்களை ஒப்படைக்கும் போது சில நிமிடங்கள் கண் கலங்கினார். எந்தவொரு சூழலிலும், தனது மகன் தான் சுந்தர் பிச்சை என்ற விவரத்தை எங்குமே அவர் பயன்படுத்தவில்லை என்றார்.
சுந்தர் பிச்சையின் வீடு இருந்த இடத்தில், புதியதாக வில்லா ஒன்று கட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.
மணிகண்டன், ரியல் எஸ்டேட் பணியையும் செய்து வருகிறார். தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம், 300 வீடுகளை அவர் கட்டிக் கொடுத்துள்ளார்.
சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 31.17 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆடம்பர இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 40 மில்லியன் டாலருக்கு சுந்தர் பிச்சை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“