Google : கூகுள் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய இந்தியருக்கு ரூ. 315 கோடி கூகுள் நிறுவனம் இழப்பீடு வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியை சேர்ந்தவர், அமித் சிங்கால். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, கூகுளில், மூத்த துணை தலைவராக, பணியாற்றி வந்தார். இந்நிலையில், அலுவலக வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அமித் சிங்கால் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூகுள் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் பகிரங்க புகார் ஒன்றை அளித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்சிங்காலுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. இந்நிலையில், இதுக் குறித்து கூகுள் நிறுவனம் சார்ப்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அமித் சிங்கால் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2016 ஆண்டு இவரை பணியில் இருந்து ராஜினாமா செய்யும்படி, 2016ல், கூகுள் நிர்வாகம் வலியுறுத்தியது. இதையடுத்து அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.'நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்ததால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, வேறு நிறுவனத்தில் பணியில் சேரக் கூடாது' என, அமித் சிங்காலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த 3 ஆண்டுகளுக்கு அவருக்கு இழப்பீடு வழங்கவும்,கூகுள் நிறுவனம் ஒப்பு கொண்டது. ஆனால் இந்த இழப்பீடு தொகை குறித்த விபரம் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிடாமல் ரகசியமாக பார்த்துக் கொண்டது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக , 'ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவருக்கு, இழப்பீடு வழங்குவது தவறு' என, கூகுள் நிறுவன பங்குதாரர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதனால் கூகுள் நிறுவனத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இதுக் குறித்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அமித் சிங்காலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான இழப்பீடாக, ரூ. 315 கோடி (45 மில்லியன் டாலர்) வழங்கியதாக கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு தலா 1.5 கோடி டாலரும் 3-ம் ஆண்டில் 50 லட்சம் டாலரிலிருந்து 1.5 கோடி டாலர் வரை அவருக்கு இழப்பீடு வழங்கியதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.