/indian-express-tamil/media/media_files/Pr0CNOZLDESJeHv9vRyK.png)
பாண்டிச்சேரி ஃப்ரென்ச் பில்டிங்
கோடை விடுமுறைக்கு குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு என்ன செய்வது? வார இறுதியில் எங்காவது அழைத்து செல்ல வேண்டுமே என்று நீங்கலள் யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கான சிறந்த திட்டங்களைப் பற்றி தான் இந்த செய்தித் தொகுப்பில் காண இருக்கிறோம். சென்னையிலிருந்து கிளம்பி புதுச்சேரிக்கு ஒரே நாளில் சென்று சுற்றி பார்த்துவிட்டு திரும்புவதற்கான அருமையான ட்ரிப் பிளான் உள்ளது.
அதிக செலவில்லாமல் ஒரே நாளில் புதுச்சேரியை சுற்றிப் பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு கழகம் (TTDC) ஒருநாள் சுற்றுலாவை நீண்ட நாட்களாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஒரு நாள் சுற்றுலாவை புக் செய்தால் போதும், ஏ.சி பேருந்தில் புதுச்சேரியின் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ருசியான உணவு சாப்பிட்டுவிட்டு, போட்டிங் செய்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பலாம்! இந்த அசத்தலான சுற்றுலாவை எப்படி புக் செய்வது? கட்டணம் என்ன என்று பார்ப்போமா?
வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கடற்கரை தேசமான புதுச்சேரி தமிழ்நாட்டுக்கு அருகில் குட்டி பிரான்ஸாக பல சிறப்புமிக்க சுற்றுலா தலங்களைக் கொண்டு நம்மை வசீகரிக்கிறது. பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் அதிகம் உள்ள புதுச்சேரி பழமையான கட்டிடக்கலையுடன் கூடிய அழகிய தேவாலயங்கள், திரும்பிய திசையெல்லாம் ஓங்கி வீசும் கடல் அலைகள் என சுற்றுலாப் பயணிகளுக்கான சொர்க்க பூமியாக திகழ்கிறது.
வண்ணமயமான பல கடற்கரைகள், அமைதியான ஆசிரமம், கண்ணை கவரும் பிரெஞ்சு கட்டிடங்கள், சொக்க வைக்கும் கஃபேக்கள் மற்றும் பப்கள், ஷாப்பிங், அரிக்கன்மேடு ASI சுற்றுலாத் தலம், எல்லா தரப்பினரையும் தன்வசம் ஈர்க்கும் ஆரோவில், புதுவையைச் சுற்றியுள்ள அழகான கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் என எல்லா தரப்பினருக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக புதுச்சேரி உள்ளது.
பயண திட்டம் என்ன?
காலை 06:30 மணி - சுற்றுலா வளாகம், சென்னையில் இருந்து இந்த பயணம் தொடங்குகிறது.ஏ.சி பேருந்தில் டிவி பார்த்துக் கொண்டே ஆனந்தமாக பயணிக்கலாம். காலை 08:00 மணி - மாமல்லபுரம் பி.ஆர்.சி.யில் காலை உணவு. காலை 10:15 மணி - உலகப்புகழ்பெற்ற ஆரோவில் செண்டு அங்கே சுற்றி பார்ப்பது. பிற்பகல் 12:15 மணி -புதுச்சேரி அருங்காட்சியகம் சென்று சுற்றி பார்ப்பது. பிற்பகல் 12:50 மணி - புதுச்சேரி கடற்கரை சென்று கடலில் விளையாடலாம். பிற்பகல் 01:30 மணி - மதிய உணவு இடைவேளை, பிற்பகல் 02:00 மணி - புதுச்சேரியின் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமம். பிற்பகல் 03:30 மணி - முதலியார் குப்பத்தில் படகு சவாரி செய்யலாம். மாலை 07:00 மணி - சுற்றுலா சென்னையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் முடிகிறது. ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புவோர்க்கு இது தான் பெஸ்ட் ஆன சாய்ஸ்.!
எவ்வளவு செலவாகும்?
ஒரே நாளில் சென்னையில் இருந்து கிளம்பி புதுச்சேரி வரை சென்று முக்கிய இடங்களை சுற்றி பார்க்கும் பெரிய பயணமாக இது இருக்கிறதே, அப்படி என்றால் அதிக செலவாகும் என்று நீங்கள் நினைத்தால் அதான் இல்லை. இதற்கு ரூ.1,850 மட்டுமே செலவாகும்.
என்னென்ன அடங்கும்?
இந்த கட்டணமானது சுற்றுலா செல்வதற்கான வாகன வாடகை, சுற்றி பார்ப்பதற்கான நுழைவு கட்டணம், உணவு, தண்ணீர், போட்டிங் செல்வதற்கான செலவு என அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.
என்னென்ன தேவை?
இந்த பயணத்தின் போது, உங்கள் அடையாள அட்டையை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதுமானது.
எப்படி புக்கிங் செய்வது?
இந்த ஒரு நாள் சுற்றுலாவில் நீங்களும் செல்ல வேண்டும் என்று நினைத்தால், https://ttdconline.com/tour/list என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலமாக உங்கள் பயணத்தை புக்கிங் செய்துகொள்ளலாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.