நாம் அன்றாடம் கடைகளிலும், சாலை ஓரங்களிலும் பார்த்துச் செல்லும் கொய்யாவில் உள்ள மருத்துவப் பயன்களை தெரிந்துக் கொண்டால் வாயடைத்துப் போவீர்கள்.
Advertisment
கொய்யாவில் வைட்டமின் -சி, ஆண்டிஆக்ஸிடண்ட், நார்ச்சத்து, பொட்டாசியம் என சத்துகள் செறிந்துள்ளன. குறிப்பாக, கொய்யாவில் உள்ள வைட்டமின் -சி, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டி நோய்களிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கொய்யாவை சாப்பிட்டு வர, நம் உடலுக்கு தேவையான வைட்டமின்-சி முழுமையாக கிடைக்கிறது.
கொய்யாவில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் உள்ளதால், நீரழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொய்யாவில், நார்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக அமைவதோடு, செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது.
வைட்டமின் -சி சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுவதால், கதிரியக்கத்திலிருந்து உடலை தற்காத்துக் கொள்ளவும், சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இதிலுள்ள லைகோபீன் சில வகையான புற்றுநோயிலிருந்து நம்மை காப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொய்யாவை அதன் தோலை நீக்காமல் சாப்பிட்டு வந்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.
கொய்யா மட்டுமல்லாது, கொய்யா இலையும் பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. கொய்யா இலையில், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. மேலும், வயிற்றுப் போக்குக்கு நல்ல மருந்தாக கொய்யா இலை உள்ளது.
இன்னும் என்ன தயக்கம்? தினமும் ஒரு கொய்யாவை சாப்பிட்டு வர, நாமும் அதன் பலன்களைப் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil