சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் நடைபெறவுள்ள நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பள்ளி மாணவா்கள் உள்பட அனைவரும் பங்கேற்கலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை ஆளுநா் மாளிகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு, அக்.15 முதல் அக். 24 வரை கொண்டாடப்பட உள்ளது. இதை ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை (அக்.15) தொடங்கி வைக்கிறார்.
இதில் பள்ளி மாணவா்கள் உள்பட அனைவரும் தினமும் மாலை 4 முதல் 6 மணி வரை நடைபெறும் (செவ்வாய்க்கிழமை தவிர) நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். நவராத்திரி விழா நடைபெறும் நாள்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இதில் பங்கேற்க ஆா்வமுள்ள நபா்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் பெயா், வயது, பாலினம், முகவரி, தொடா்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை "rbnavaratrifest@tn.gov.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
/indian-express-tamil/media/media_files/s6RFlLuQB17I1besTeFZ.jpg)
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பேருக்கு (முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில்) அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பி உறுதிப்படுத்தப்படும்.
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல், அசல் புகைப்பட அடையாள சான்றுடன் ஆளுநா் மாளிகை வாயில் எண்.2-க்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வர வேண்டும்.
வெளிநாட்டினரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவா்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாள சான்றாகக் கருதப்படும். சென்னை ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் கைப்பேசி மற்றும் புகைப்படக் கருவிகள் அனுமதிக்கப்படாது.
நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை ஆளுநா் மாளிகைக்கு உண்டு, இவ்வாறு ஆளுநா் மாளிகை நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“