நன்றாக சாப்பிட்டு முடித்ததும் இனிப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அந்த உணவு முழுமை அடையாததை போன்று தோன்றும் என சிலர் கூறுவார்கள். எனினும், அதிகமாக இனிப்பு வகைகள் சாப்பிடாமல் இருப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: This is what happens if you guzzle water after having desserts
இந்நிலையில், உடலில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க, இனிப்பை சாப்பிட்ட பிறகு, தண்ணீரைக் குடிக்குமாறு பரிந்துரைக்கும் சமூக ஊடக வீடியோவை நாங்கள் பார்த்தோம். அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய விரும்பினோம்.
இந்தக் கூற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா?
சென்னை, ப்ராக்மாடிக் நியூட்ரிஷனின் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான மீனு பாலாஜி, இது குறித்து indianexpress.com-இடம் கூறுகையில், "இனிப்புகளை சாப்பிட்ட பிறகு தண்ணீரை குடிப்பது, உண்மையில் குடல் ஆரோக்கியத்தில் சர்க்கரையின் தாக்கத்தை குறைக்காது. ஆனால் மற்ற வழிகளில் இது உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க உதவும். ஏனெனில் சரியாக தண்ணீர் குடிக்காதது நீரிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் இருக்கும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்" எனக் கூறினார்.
"உமிழ்நீரை உற்பத்தி செய்வதன் மூலம் நீர் செரிமானத்திற்கு உதவி செய்கிறது. மிக முக்கியமாக இது உணவை உடைத்து செரிமான நொதிகளுடன் கலக்கிறது. இது உணவை மெல்லவும், விழுங்கவும் உதவுகிறது. மேலும், குடல் இயக்கங்களை சீராக்குகிறது. இது பல் சிதைவைக் குறைக்கவும் உதவும். ஏனெனில், உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களை அகற்றும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையில் செழித்து வளரும். எனவே, தண்ணீர் குடிப்பது பல் சொத்தையை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்" என்று அவர் indianexpress.com-இடம் கூறினார்.
குடல் ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கத்தை குறைக்க இனிப்புகளை எவ்வாறு சாப்பிடலாம்?
இனிப்புகள் சாப்பிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
1. ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து அல்லது புரதத்துடன் இனிப்புகளை இணைக்கவும்: இந்த ஊட்டச்சத்துகளுடன் இனிப்பை சாப்பிடுவது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும். நீங்கள் ஒரு டீஸ்பூன் வறுத்த சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகளுடன் இனிப்புகளை உண்ணலாம்.
2. ஆரோக்கியமான மாற்று உணவுகளை பயன்படுத்தவும்: உங்களுக்கு குடல் பிரச்சனைகள் இருந்தால், வெள்ளை சர்க்கரையைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, வாழைப்பழம், ஆப்பிள் சாஸ் அல்லது பேரிச்சம்பழம் போன்றவற்றை பயன்படுத்தலாம். நீங்கள் கருப்பட்டி அல்லது வெல்லத்தை குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
3. ஒரே நேரத்தில் முழுவதுமாக சாப்பிடக் கூடாது: அதிகப்படியான இனிப்புகள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். அவற்றையும் முழுவதுமாக அல்லாமல் பகுதிகளாக பிரித்து சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.