மெலிந்து போவது முதல் நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் வரை, மக்கள் பல முடி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். முடி மற்றும் தோல் உட்பட ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு முக்கியமானது என்றாலும், உணவில் சில உணவுகள் அல்லது ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது சில சிக்கல்களைத் தீர்க்க உதவும்.
நிறைய முடி உபாதைகளை சமாளிக்கும் அத்தகைய மூலிகைகளில் ஒன்று கரிசலாங்கண்ணி (bhringraj), இதை ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி, “பெரும்பாலான முடி பிரச்சனைகளுக்கு இயற்கையின் அமுதம்” என்று கூறுகிறார்.
ஆயுர்வேதத்தின் படி, உங்கள் தலைமுடி பிரச்சனைகளை சமாளிக்க கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இதில் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது முடி உதிர்வைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.
இந்த அதிசய மூலிகையின் நன்மைகளைப் பட்டியலிட்ட டாக்டர் அஞ்சலி, கரிசலாங்கண்ணி “உச்சந்தலையில் மற்றும் ஹேர் ஃபாலிக்கிளில், ரத்த ஓட்டத்தை திறம்பட அதிகரிக்கிறது, இது ரத்த விநியோகத்தின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு வேர்களை வளப்படுத்துகிறது” என்று கூறினார்.

இருப்பினும், கேஷ்ராஜ் என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி, நிபுணர் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பவ்சர் சவாலியா அறிவுறுத்தினார். “ஆம், ஆயுர்வேதத்தின் படி, முடி உதிர்தல் போன்ற முடி பிரச்சினைகளுக்கு கரிசலாங்கண்ணி சிறந்ததாக கருதப்படுகிறது.
இருப்பினும், நீங்கள் உட்கொள்ளத் திட்டமிட்டால், ஆயுர்வேத பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நெய்யுடன் ஒன்றுக்கு மேற்பட்ட டீஸ்பூன் பரிந்துரைக்கப்படவில்லை, என்று டாக்டர் டிக்ஸா கூறினார்.
எண்ணெய், பவுடர், கேப்சூல், மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் கரிசலாங்கண்ணி, சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்கலாம். அதற்கு உங்களுக்கு தேவையானது சில கரிசலாங்கண்ணி இலைகள் அல்லது அதன் தூள் மட்டுமே..
கரிசலாங்கண்ணி எண்ணெய் எப்படி செய்வது?
இலைகளை பொடியாக நறுக்கி ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் கடாயில் போடவும். மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தீயை அணைத்து, எண்ணெயை ஆற விடவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைக்கவும். சில நாட்களுக்குப் பிறகு, எண்ணெயை வடிகட்டவும், இப்போது இலைகள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை எண்ணெயில் வெளியிட்டிருக்கும்.
வாரத்திற்கு இரண்டு முறை, இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி இரவு முழுவதும் விடலாம். சுமார் நான்கு மாதங்கள் முயற்சிக்கவும். இது உங்கள் தலைமுடியில் அதிசயங்களைச் செய்கிறது என்று கூறப்படுகிறது, என்று டாக்டர் அஞ்சலி கூறினார்.
கரிசலாங்கண்ணி பொடியுடன் எண்ணெய்
3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் பொடியைச் சேர்த்து, அவற்றைக் கலக்கவும். இது இப்போது உச்சந்தலையில் பயன்படுத்த தயாராக உள்ளது. அப்ளை செய்த பிறகு, அதை இரவு முழுவதும் வைத்து அடுத்த நாள் கழுவவும், நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தவும், இது முடி பிரச்சனைகளுக்கு உதவும், என்று டாக்டர் அஞ்சலி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“