வழுக்கை தலையில் எண்ணெய் தடவினால் முடி வளருமா? டாக்டர் அருண்குமார் விளக்கம்
துரதிர்ஷ்டவசமாக, அந்த எண்ணெய் அவர்களின் கண்களைப் பாதித்து, 70 பேருக்கும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, அந்த எண்ணெய் அவர்களின் கண்களைப் பாதித்து, 70 பேருக்கும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இணையத்தைத் திறந்தாலே, வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாகக் கூறும் எண்ணற்ற விளம்பரங்கள் கண்களில் படுகின்றன. "பாதிவாசி தைலம்," "அமேசான் காட்டு மூலிகை," "ஆப்பிரிக்கக் காட்டு மருந்து" என்று விதவிதமான பெயர்களில் வரும் இந்த விளம்பரங்களை நம்பி ஏமாந்தவர்களின் பரிதாபமான கதை ஒன்று சமீபத்தில் பஞ்சாபில் நடந்துள்ளது.
Advertisment
பஞ்சாபில் ஒரு சிலர் வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாகக் கூறி போலியான முகாம்களை நடத்தி ஒரு எண்ணெயை விற்றுள்ளனர். அதில், எண்ணெய் தடவிய 70 பேருக்கு கண் எரிச்சல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முகாம்களை நடத்தியவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்மையில் வழுக்கை தலைக்கு முடி வளருமா?
Advertisment
Advertisements
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கைத் தலைக்கு முக்கிய காரணம் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா (Androgenic Alopecia) எனப்படும் ஒரு வகையான மரபணுக் கோளாறு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள். இது பொதுவாக 30-40 வயதிற்கு மேல் பல ஆண்களுக்கு எம் (M) வடிவில் முடி உதிர்வைத் தொடங்குகிறது. முடி உதிர்ந்த பிறகு, ஹேர் பாலிக்கிள்கள் (Hair Follicles) முழுமையாகச் சேதமடைந்துவிட்டால், இயற்கையாக முடி வளர்ப்பது மிகவும் கடினம்.
ஆனால், ஆரம்ப நிலையிலேயே முடி உதிர்வதைக் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் முன்னேற்றம் காண முடியும். தோல் மருத்துவர்களை அணுகினால், மினாக்ஸிடில் (Minoxidil) போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மேலும், ஃபினாஸ்டெரைடு (Finasteride) மாத்திரை அல்லது சொல்யூஷன் வடிவிலும் கொடுக்கப்படலாம். இந்த மருந்துகள் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
பிஆர்பி சிகிச்சை (PRP Therapy) போன்ற சில சிகிச்சைகளும் உள்ளன. இருப்பினும், அவை இன்னும் முழுமையாக நிரூபிக்கப்பட்டவை அல்ல.
வழுக்கைத் தலைக்கு எண்ணெய்கள் பயனுள்ளதா?
முழுமையாக வழுக்கை ஏற்பட்ட பிறகு, எந்த ஒரு எண்ணெய், மருந்து, ஊசி அல்லது மாத்திரையும் முடி வளர்ச்சியைத் தூண்டாது. ஹேர் டிரான்ஸ்பிளான்ட் (Hair Transplant) எனப்படும் முடி மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியாகும். ஆனால், இதிலும் சில தொற்று அபாயங்கள் இருப்பதால், தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே இதைச் செய்துகொள்ள வேண்டும்.
சாதாரண எண்ணெய்கள் முடிக்கு ஒரு உயவுத்தன்மையை (Lubrication) மட்டுமே அளிக்கின்றன. அவை மயிர்க்கால்களின் வேர் வரை ஊடுருவிச் செல்வதில்லை. உதாரணமாக, பெண்களுக்கு முடி சிக்கில்லாமல் இருக்க எண்ணெய் ஒரு உயவுத்தன்மையை அளிக்கும். ஆனால், ஒரு மில்லிமீட்டர் கூட எண்ணெயால் முடியின் வேர் வரை ஊடுருவ முடியாது. எனவே, முடி வளர்க்கிறேன் என்று கூறி விற்கப்படும் எந்த ஒரு எண்ணெயும் பெரிய அளவில் பலனளிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பஞ்சாபில் நடந்ததைப் போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாறாமல், முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் உடனடியாக ஒரு தோல் மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சை பெறுவதே சிறந்தது.