இன்றைய தலைமுறைக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், முடி உதிர்வு என்பது பிரதானமான பிரச்சனையாக உள்ளது. இதற்காக எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றியும் சரியான பலனளிக்கவில்லை என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் வீட்டில் பயன்படுத்தக் கூடிய சில பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஹேர்பேக்கை பயன்படுத்தி, முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும்.
இந்த ஹேர்பேக் தயார் செய்வதற்கு 10 முதல் 15 செம்பருத்தி இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கிளாஸ் காய்ச்சாத பசும்பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்த பின்னர், இந்தக் கலவையை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளலாம்.
மற்றொரு புறம், 50 கிராம் அளவிற்கு வெந்தயம் மற்றும் பாசிபயிறு இரண்டையும் எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரைத்த பின்னர் இந்த பொடியுடன் முதலில் எடுத்து வைத்திருந்த செம்பருத்தி சாறை சேர்க்க வேண்டும். இப்போது நம் முடிக்கு தேவையான ஹேர்பேக் தயாராகி விடும்.
இதனை தலை முடியில் நன்றாக தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினால் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். மேலும், இதில் வெந்தயத்தை ஊற வைக்காமல் பயன்படுத்தியதால் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரும் என்கிற பயமும் தேவையில்லை.
இது போன்று இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் ஹோம்மேட் ஹேர்பேக்கை பயன்படுத்துவதால் ஒவ்வாமையும் ஏற்படாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.