Happy Pongal 2022 : தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்படும். சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து விவசாய பெருமக்கள் அறுவடை திருநாளாக இந்நாளை கொண்டாடி வருகின்றனர். போகியோடு சேர்த்து நான்கு நாட்கள் மிக சிறப்பாக சாதி, மத பேதமின்றி மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
அது என்ன சமத்துவ பொங்கல்?
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என்று மத ரீதியாக பல்வேறு வழிபாட்டு முறைகளை தமிழர்கள் கடைபிடித்து வந்தாலும் கூட பொங்கல் திருநாளின் போது பெரும்பாலான கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாதி, மத, இன பேதமின்றி பொங்கல் வைத்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். இது தமிழகத்திற்கே உரிய பெருமையான விசயமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் மட்டும் அல்ல தேவாலயங்களிலும் பொங்கல் வைத்து கொண்டாடுவது தமிழ் கிறித்துவர்களின் மரபுகளில் ஒன்றாகவே மாறிவிட்டது.
பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுக்கிறது?
போகியும் காப்புக்கட்டும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் திருநாள் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்பட்டாலும் பொதுவாக போகி அன்று வீடு வாசல் சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, மாவிலை தோரணம் கட்டி, பழைய பொருட்களை எல்லாம் வீட்டில் இருந்து வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாவிலை, மூக்குத்திப்பூ (சிறுபீளை), ஆவாரம்பூ, மற்றும் வேப்பிலை ஆகியவற்றை கட்டி காப்பு கட்டும் பழக்கம் இன்றும் பெரும்பாலான வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பு கட்டுதலில் இடம் பெறும் ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கிறது என்பதால் இந்த செடிகளை வீட்டு முன் வாசலில் கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பொங்கல்
சூரிய உதயத்திற்கு முன்பு கிராமங்களில் விவசாய குடும்பத்தினர் சூரியனுக்கு படையலிட்டு பொங்கல் வைப்பது வழக்கமான ஒன்றாகும். புதுப்பானையில் புத்தரிசி இட்டு வெள்ளம் பால் கலந்து பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து தங்களின் நன்றியை தெரிவிப்பதுண்டு.தனித்தனி குடும்பமாக பொங்கல் வைப்பதும் உண்டு. ஒரு சில இடங்களில் சமுதாய பொங்கல் என்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கலிடுவதும் உண்டு.
மாட்டுப் பொங்கல்
கிராமப்புறங்களில் மிகவும் சுவாரசியமான பொங்கல் இதுவாக தான் இருக்கும். தங்கள் வீட்டில் இருக்கும் கால்நடைகள் அனைத்தையும் குளிக்க வைத்து, மாடுகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, மாலை அணிவித்து மாடுகளுக்கு பொங்கலிடுவதை தமிழ் பெருங்குடிகள் காலம் காலமாக செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் அறுவடை திருநாளின் போது மாடுகளுக்கு மட்டுமின்றி யானைகளுக்கும் பொங்கலிடும் பழக்கம் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் முக்கிய யானைகள் முகாம்களில் யானைப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் மாடுகள் தொழுகைகளில் கட்டி வைக்கப்படாமல் அவிழ்த்துவிடப்பட்டு விடும்.
காணும் பொங்கல் / மெரினா பொங்கல்
காணும் பொங்கல் அன்று தன்னுடைய சொந்த பந்தங்கள் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் திருநாள். சில ஊர்களில், கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, சருக்குமரம் ஏறுதல் போன்று பல்வேறு விளையாட்டு நிகழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் உலகப் புகழ்பெற்றவை. இதே காலகட்டத்தில் கோவை மற்றும் இதர கொங்கு பகுதிகளில் ரேக்ளா பந்தயங்களும் நடைபெறுவதுண்டு. சென்னை மக்கள் காணும் பொங்கலை திருவிழா போன்று மெரினா கடற்கரையில் கொண்டாடுவதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விழா காலங்கள் இத்தனை களைகட்டுவதில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.