Ramadan 2020: இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.
30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, கடந்த சனிக்கிழமை பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறை தெரியாததால் (மே.25) இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு மாதம் முழுக்க குறிப்பிட்ட நேரம் முதல் குறிப்பிட்ட நேரம் வரை உண்ணாமல், குடிக்காமல், நோன்பிருந்து, மாத முடிவில் அதைக் கொண்டாடும் இந்த ரம்ஜான் பெருநாள் பல சிறப்புகளை கொண்டது.
நோன்பிருந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும், சமுதாயத்தவருக்கும் மகிழ்ச்சி தருவது இந்த திருநாள்.
காரணம் இந்த மாதத்தில்தான் ஜகாத் என்று சொல்லப்படும் ஏழை வரி ஏராளமாக மனசாட்சி உள்ள சம்பாதிப்பவர்களால் கொடுக்கப்படுகிறது.
வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதே இங்கு ஒரு கடமையாகும். நோன்பு என்பது சும்மா பட்டினி கிடப்பதல்ல.
எல்லாம் இருந்தும், இறைவனுக்காக எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்ற கடமையாகும். அதன் மூலம் பசி, பட்டினியால் வாடும் ஏழைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இந்த புனிதமிக்க மாதம் வழி வகுக்கிறது.
ஒரு பிரச்சனையை வெளியில் இருந்து பார்க்காமல், அதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நோன்பையும் இறைவன் இஸ்லாத்தில் ஒரு கடமையாக ஆக்கி வைத்துள்ளார்.
இந்த கடமையை நிறைவேற்றுவதன் மூலம் சுய கட்டுப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். என்று இறைவன் திருக்குர் ஆனில் கூறுகின்றார்.
ஆயிரம் மாதங்களை விட இந்த மாதம் சிறப்பு மிக்கது, ஏன்? இந்த மாதத்தில்தான் புனித குர்ஆன் நபிகள் நாயகத்துக்கு இறைவனால் அருளப்பட்டது.
நோன்பு பிடித்தவர்களை கண்ணியப்படுத்தும் பொருட்கள் ரையான் என்ற சிறப்பு வாயிலை இறைவன் சொர்க்கத்தில் திறந்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றார்.
ரமலான் மாதத்தில் கருணையின் கதவுகள் திறக்கப்படுவதாகவும், நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும் நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.
இந்த புனித ஈகைத் திருநாளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மக்கள் எல்லா நலனும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.