சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், நாம் அன்றாட உண்ணும் பழ வகைகளில் ஒன்றான வாழைப் பழத்தில் இருக்கும் அற்புத நன்மைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
சிறு வயது முதலே குழந்தைகளுக்குச் சர்க்கரை மீதான பிடிப்பை பெற்றோர்கள் குறைக்க வேண்டும். வெள்ளை சர்க்கரையை முழுவதுமாகத் தவிர்த்து இனிப்பு பழங்களை சாப்பிட பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் அதில் ஆகச் சிறந்தது வாழைப்பழம் என்கிறார் மருத்துவர் சித்தராமன்.
தினம் ஒரு வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்துவர வேண்டும். அது நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, மலை வாழை, சிறுமலை வாழை, நாட்டுவாழை என தினம் ஒரு வாழை பழங்களை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் சிவரமான்.
செவ்வாழை: செவ்வாழையில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றில் நிறைந்துள்ளன. நின்று கொண்டே பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், காவலர்களுக்குக் குதிகாலில் ஏற்படக்கூடிய வலி தீருவதற்கு தினம் ஒரு செவ்வாழை சாப்பிடவேண்டும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
குழந்தைகள் எடை போடவில்லை என்றால், அவர்களுக்கு நேத்திரம் வாழைப்பழம் கொடுக்கலாம். தாய்ப்பால் மறக்கடிப்புக்கு பிறகு குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்க வேண்டும் என்றால், அப்போது மட்டி வாழைப்பழம் கொடுக்க வேண்டும். இவை நாகர்கோவில் பகுதிகளில் கிடைக்கிறது. மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்னை இருப்பவர்கள் உண்ண வேண்டியது நாட்டு வாழைப்பழம் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலுக்கும், வயிற்றில் புண் இருப்பவர்களும், உடல் சூட்டை தணிக்கவும் ஏற்ற பழம் மோரிஸ் வாழைப்பழம். தருமபுரி ஏலக்கி வாழைப்பழம், திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம், ஈரோடு தேன்களி வாழைப் பழம் என ஒவ்வொரு வாழைப்பழத்தும் ஒரு மருத்துவ குணம் உள்ளது." என்று அவர் கூறுகிறார்.