நமது வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயம், எலுமிச்சை, தேன் ஆகிய மூன்று பொருள்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.
வெந்தயம்
சமையலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் வெந்தயம். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல், புற்றுநோய் வராமல் பாதுகாப்பது, செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.முளைகட்டிய வெந்தயம் உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது. மேலும் இதயத்திற்கு மிகவும் நல்லது. இது உடம்பில் கொழுப்புகள் சேராமல் பார்த்துக்கொள்ளும் அதனால் இதயத்தின் செயல்பாட்டில் எந்தவித இடரும் இல்லாமல் இருக்கும். செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள், அல்சர் போன்றவை நீங்கும்.வெந்தயம் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வெப்பம் நீங்கி உடல் குளிர்ச்சியாகும்.நீரிழிவு நோயாளிகள், வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரோடு வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும். தினசரி 10 கிராம் வெந்தய விதைகளை சூடான நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் என ஆய்வுகள் கூறுகிறது. மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாய்வு, பொருமல் நீங்கும்.ஒரு நாளில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை விட அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கலாம்.
எலுமிச்சை
சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்த பழ வகைகளில் ஒன்று எலுமிச்சை. இதில் நிறைந்திருக்கும் சிட்ரிக் அமிலம் மனிதர்களின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள், கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பிறவும் சிறிதளவில் கலந்துள்ளன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.எலுமிச்சை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால், அவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சை சாறு உடலில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது.
விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு டம்பளர் எலுமிச்சை சாறு அருந்தினால் உடனடி தெம்பு கிடைக்கும்.குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள். இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும். தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு எலுமிச்சை பழம் பெருமளவில் உதவுகிறது. எலுமிச்சை சாற்றை தலைமுடியின் வேர்களில் ஊறுமளவிற்கு தடவி சிறுது நேரம் ஊறவைத்து குளித்தால் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது. தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எலுமிச்சைப்பழச் சாறு சிறந்த தீர்வாக இருக்கிறது. சொறி, படர் தாமரை, பூஞ்சை போன்றவற்றால் நமது தோலில் ஏற்படும் பாதிப்புகளின் மீது, எலுமிச்சைப் பழ சாறை தடவுவதால் தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்குகின்றன. எலுமிச்சம் பழத்தை எலுமிச்சை சாறாகவோ அல்லது பானம் சர்ந்ததாகவோ பயன்படுத்தலாம்.எலுமிச்சையின் தோலினை சூரிய ஒளியில் வைத்து பவுடர் போல மாற்றி முகத்தில் தடவலாம். வினிகர் கலந்த எலுமிச்சை சாறு உடைகள் மற்றும் ஜன்னல்களை தூய்மையாக்க சிறந்த பொருளாக அறியப்படுகிறது. முக்கியமாக உடல் எடையை குறைக்க லெமன் டீ குடிக்கலாம். தினமும் காலையில் குடித்து வந்தால் நல்ல பயனை காணலாம்.
தேன்
இயற்கை தந்த பல கொடைகளில் தேன் அற்புதமான மருத்துவ குணம் கொண்ட உணவு பொருளாகும். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். பல்வேறு வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. அதேநேரம் இதில் சுலபமாக கலப்படம் செய்ய முடியும்.பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது. கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.
குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு / வெற்றிலை சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை அருந்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.இரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்த உதவும். இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும் தேன் மிக உதவியாக இருக்கிறது.தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் விதமாக வரக்கூடிய இருமலைப்போக்க தேன் நல்ல மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றில் கூறியுள்ளது. புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத மருந்தாகத் தேன் செயல்படும். தேனில் உள்ள மிக முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸான பாலி பீனால்கள், மனஅழுத்தம், மனச் சோர்வு, மன பதற்றம் மற்றும் மன உளைச்சலை நீக்கி மனதுக்கு அமைதியைத் தரும்.
தீப்புண், வெந்நீர்ப் புண்களில் கொப்பளம் ஏற்படாமல் இருக்கவும், புண்கள் விரைவில் ஆறவும் தேனைப் பயன்படுத்துகிறார்கள். உடலில் கட்டிகள் இருந்தால் அவற்றைப் பழுக்க வைப்பதற்காகத் தேனுடன் சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து கட்டிகள் மீது பூசலாம்.கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வறண்ட சருமத்தை மிருதுவாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “