குடம்புளி உட்கொண்டால், குடலில் ஏற்படும் அமிலத்தன்மை நீங்கும். மேலும் அஜீரணம், இரைப்பை போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை இது கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது குடம்புளி என்கிறார் மருத்துவர் சிவராமன்.
உணவில் தினமும் ஏதேனும் ஒரு புளி எடுத்துக் கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தும் மருத்துவர் சிவராமன்,
குடம் புளியை சமையலில் சேர்த்து வந்தால், முதுமைக் காலத்தில் ஏற்படும் மூட்டுவலி பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்கிறார்.
உடல் எடையைக் குறைக்கும், இதயத்தைக் காக்கும், மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது குடம்புளி. உடல் எடையைக் குறைக்கும் மருந்து வகைகளில், மிக முக்கியமான மூலப் பொருளாக குடம்புளி பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட் (Hydroxycitric Acid) இதயத்தைக் காக்கக்கூடியது. அத்துடன் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமான செயல்பாடுகள் ஒழுங்காக நடக்கும் எனக் கூறப்படுகிறது.
குடம்புளி எங்கே கிடைக்கும்?
பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் பின் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலைதான் சற்று அதிகம்.
எந்தெந்த சமையலில் குடம்புளி சேர்க்கலாம்?
காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என நாம் வழக்கமாகப் புளி சேர்த்து சமைக்கும் அத்தனை உணவுப் பொருட்களிலும் குடம் புளி சேர்த்து சமைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.